தமிழர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி நேரடியாகப் போராடியவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம் அகிம்சைப் போராட்டத்தையும் நடாத்தலாம் ஆனால் அவர்கள் கொள்கையில் இருந்து மாறக் கூடாது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,
அரசாங்கத்துடன் பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்தப் பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்ட எதையுமே அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதற்காக ஒரு எழுத்து மூலமான பதிலை அரசிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டிருந்தது.
இந்த நிலையில் அரசிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில் மீண்டும் கூட்டமைப்பு அரசிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள விடயத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது இது நியாயமானதே.
எமது விடுதலைப் போராட்டம் அகிம்சைப் போராட்டமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் கடந்த 62 வருடங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஆனால் இதில் எமக்கு எதிர்பார்த்தளவு வெற்றி கிடைக்காவிட்டாலும் தற்போது எமது போராட்டம் சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு போராட்டமாகவும் சர்வதேச வல்லரசு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்கும்படி அழுத்தம் கொடுக்கின்ற சந்தர்ப்பத்திற்கும் எமது போராட்டம் வழிவகுத்துள்ளது.
இந்த வகையில்தான் அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளின் ஆலோசனைப்படி அரசியல் தீர்வு விடயமாக மீண்டும் அரசுடன் பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது.
இந்த நேரத்தில் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும். அதற்காக நடைபெற இருக்கின்ற கல்முனை நகர சபைக்கான தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் கொள்கை மாறக்கூடாது. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தனது கொள்கையில் மாறவில்லை. இனிமேலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாறாது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படமாட்டாது.
ஆனால் அரசாங்கத்துடன் இருக்கின்ற சில தமிழ் அமைச்சர்மார் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிவிருத்தி பற்றியும் அவர்களின் முன்னேற்றம் பற்றியும் கூறும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்கின்றார்கள்.
இந்த அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இருக்கும்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பற்றி எவ்வாறு பேச முடியும் அவ்வாறு பேசினார்களே ஆனால் அடுத்த கணமே அவர்கள் தங்களது பதவியை விடுத்து வீட்டுக்குச் செல்ல வேண்டி நேரிடும்.
தமிழ் மக்களுக்கு தற்போது வேண்டியது வெறுமனே அபிவிருத்தி மட்டுமல்ல தங்களது பூர்வீக இடங்களில் தாங்கள் சுதந்திரமாக வாழவேண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடிகின்றதா இல்லை.
எனவே தமிழர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி நேரடியாகப் போராடியவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம் அகிம்சைப் போராட்டத்தையும் நடாத்தலாம். ஆனால் அவர்கள் கொள்கையில் இருந்து மாறக் கூடாது.
தமிழர் உரிமைக்காக போராடும்போது ஒன்றையும் அரசாங்கத்துடன் அமைச்சு பதவியில் இருக்கும்போது இன்னொன்றையும் கூறுவதால் தங்களை தாங்களே புத்திசாலிகள் என நினைக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?