Friday 23 September 2011

அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியேறுவார்களா?

 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடன் பேச்சு நடத்திக் கொண்டே பெரும்பாலான பதவிகளுக்கு அதிமுக வேட்பாளரை அறிவித்துவிட்டதால், கூட்டணியிலிருந்து வெளியேற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா என இந்தக் கட்சிகள் யோசித்து வருகின்றன.
 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் சேர்ந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுக மதிப்பதாகத் தெரியவில்லை. இவர்களுடன் பேசிக் கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை முதலில் அறிவித்த அதிமுக, அடுத்தடுத்து 124 நகராட்சிகளுக்கும், அனைத்து பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
 
மேலும் மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும்கூட வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அதிமுக.
 
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டுமே கொஞ்சம் தைரியமாக தனது அதிருப்தியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதி வெளிப்படுத்தியது. ஆனாலும் அந்தக் கடிதத்தில் கெஞ்சலே அதிகமாக இருந்தது.
 
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அதைக் கூட செய்யவில்லை.
 
2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு டீசன்டான இடங்களை ஒதுக்கிக் தந்தது திமுக. அப்போது போட்டியிட்ட இடங்களையாவது தங்களுக்கு இப்போது ஒதுக்குமாறு இந்தக் கட்சிகள் கோரி வருகின்றன.
 
ஆனால், கம்யூனிஸ்டுகள் கேட்கும் இடங்களுக்கும் அதிமுக தரப்பில் தருவதாக சொல்லும் இடங்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தே இல்லை என்று தெரிகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 8 சதவீதம் அளவுக்கு மார்க்சிஸ்ட் கேட்க, 2 சதவீதத்துக்கும் குறைவான இடங்களையே தர முடியும் என அதிமுக கூறிவிடடதாகத் தெரிகிறது.
 
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னொரு பட்டியலைத் தயாரித்து அதிமுக குழுவிடம் தந்துள்ளனர். அதில் கேட்கப்பட்டுள்ள இடங்களுக்கு நெருக்கமாக இட ஒதுக்கீடு தருவதாக இருந்தால் மட்டுமே தங்களை மீண்டும் பேச அழைக்குமாறும், மற்றபடி போயஸ் கார்டனுக்கு ராத்திரி நேரத்தில் வந்து டீ, பிஸ்கெட், வடை சாப்பிட்டுவிட்டுப் போக நாங்கள் தயாராக இல்லை என்றும் அதிமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
 
ஆனால், அப்படி ஏதும் பிரச்சனையே இல்லாதது போல நடித்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட். அதிமுக குழு அழைக்கும்போதெல்லாம் பேச்சு நடத்த போயஸ் தோட்டத்துக்கு வந்துவிட்டுச் செல்லும் இந்தக் கட்சியினர் நேற்றும் அதிமுகவுடன் பேச்சு நடத்தினர்.
 
ஆனால், பேச்சுவார்த்தைக்குப் பின் முகம் வெளிறிப் போய் வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் நிருபர்களிடம் எதையுமே கூறாமல் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டனர்.
 
இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் செய்ய 29ம் தேதி தான் கடைசி நான் என்ற நிலையில், 30ம் தேதி வரை கூட அதிமுக தங்களிடம் பேச்சு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருதுகின்றனர்.
 
கடைசி நேரத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க தனது கட்சி வேட்பாளர்களை தனியாகவே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு மார்க்சிஸ்ட் தலைமை அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
 
இந் நிலையில் திமுகவால் கழற்றிவிடப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
 
தங்களுடன் கூட்டணிக்கு வருமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு பா.ம.க. அழைப்பு விடுத்துள்ளது. ஆனாலும், உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணி வெல்லாது என விடுதலை சிறுத்தைகள் கருதுகிறது.
 
கவுன்சிலர் தேர்தல்களைப் பொறுத்தவரை வன்னியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தங்களது வேட்பாளர்களுக்கும், தலித்கள் அதிகமுள்ள பகுதிகளில் பாமகவுக்கும் ஓட்டு கிடைக்காது என்பதால் இந்தக் கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தயாராக இல்லை.
 
இதனால் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிடவே விடுதலைச் சிறுத்தைகள் ஆர்வமாக உள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger