தேமுதிக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கட்சி தொடங்கிய இந்த 7 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தனித்தேப் போட்டியிட்டு வந்த தேமுதிக இடையில் சட்டசபைத் தேர்தலில் மட்டும் கூட்டணி அரசியலுக்குள் புகுந்து தற்போது மீண்டும் தனியே வந்துள்ளது தேமுதிகவின் எதிர்காலத் திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
தேமுதிகவின் இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.
2004ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் வைத்து தனது கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். தொடங்கியது முதல் தொடர்ந்து அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தேப் போட்டியிட்டு வந்தது தேமுதிக.
2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால் விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலத்தில் வென்றார். இருப்பினும் அக்கட்சிக்கு கிடைத்த 27.64 லட்சம் ஓட்டுக்கள் அனைவரையும் வியக்க வைத்தது. ஒரு இடத்தில் மட்டும் அக்கட்சி அப்போது ஜெயித்தாலும் கூட பல தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு வித்திட்டது. இதனால் தமிழகத்தில் முதல் முறையாக யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.
பின்னர் 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் தேமுதிக அசத்தலான வாக்குகளை அள்ளியது. இந்த முறை 30 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றது தேமுதிக. ஆனால் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அதேசமயம், அதிமுகவின் பல வெற்றிகளை தட்டிப் பறித்தது. திமுகவுக்கு இது சாதகமாக அமைந்தது. தோற்கும் எனக் கருதப்பட்ட திமுக கூட்டணி வெற்றி பெற விஜயகாந்த் பிரித்த வாக்குகளே காரணம் என்று தெரிய வந்தது.
இதனால்தான் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடுமையாக முயன்று விஜயகாந்த்தை தன் பக்கம் இழுத்தார் ஜெயலலிதா. விளைவு, அதிமுகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்தது. தேமுதிகவுக்கும் அதிமுகவின் புண்ணியத்தால் 29 தொகுதிகள் கிடைத்தன, கூடவே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது. அதுவரை வெறும் ஓட்டுப் பிரிக்கும் கட்சியாகவே இருந்து வந்த தேமுதிக, ஒரு முழுமையான அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியது இந்த தேர்தலில்தான்.
தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், போகும் இடமெல்லாம் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மட்டும் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அப்போது அவரது முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் திமுகவின் மீதான மக்களின் கடும் அதிருப்தி, அதிமுகவுடன் இணைந்ததால் கிடைத்த பலம் ஆகியவற்றாலும், அவருக்கென்று இருந்த வாக்கு வங்கியாலும் அந்தப் பிரசாரம் தவிடுபொடியானது. அதிமுக கூட்டணி வென்றது.
இப்போது உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் அதிமுகவால் கேவலப்படுத்தப்பட்ட விஜய்காந்த் மீண்டும் தனியாக வந்து விட்டார். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்த தேமுதிக சின்ன பிரேக்குக்குப் பின்னர் மீணடும் தனிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டினால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவே தங்களிடம் ஓடி வரும் என்று விஜய்காந்த் கருதுகிறார். இல்லாவிட்டால், திமுகவை கழற்றிவிடும் திட்டத்தில் உள்ள காங்கிரசுடனும் அவர் கூட்டணி சேரலாம்.
எது எப்படியோ மீண்டும் ஒரு வாக்குப் பிரிப்புக்கு தேமுதிக தயாராகி விட்டது. தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக, பாமக, மதிமுக, தேமுதிக என கிட்டத்தட்ட முக்கியக் கட்சிகள் அனைத்துமே தனியாக நிற்கின்றன. இதனால் அடிபடப் போவது யார், அள்ளப் போவது யார் என்ற அரசியல் விளையாட்டு சூடுபிடித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?