திருகோணமலை நகரில் அமைந்துள்ள இந்து மயானத்துக்குள் விபச்சாரம் இடம்பெறுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இருக்கிறம் பத்திரிகை பட ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை இந்து இளைஞர் பேரவையின் செயலாளர், திருகோணமலை நகர சபை செயலாளர் ஆகியோர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து இருக்கிறம் இத்தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. இந்தவாரம் வெளியாகியிருக்கின்ற இப்பத்திரிகையிலேயே இக்கட்டுரை வெளியாகியுள்ளது.
திருகோணமலை நகரிலிருந்து நிலாவெளி செல்லும் பிரதான வீதியில் திருகோணமலை இந்து மயானம் அமைந்துள்ளது. நகர சபை எல்லைக்குள் உள்ள இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான இந்து மக்கள் பயன்படுத்தும் ஒரே இந்து மயானம் இதுவாகும். இங்கு காணப்படும் குறுகிய பரப்பளவிலேயே, நகரத்தில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களின் நல்லடக்கங்களும் தகனக் கிரியைகளும் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு நிக்கோட் நிறுவனத்தின் உதவியுடன் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் எரிவாயுவினால் இயங்கும் தகனக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜீலை 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் முதலாவதாக அமைக்கப்பட்டதும் இன்றுவரை காணப்படுவதுமான ஒரே தகனக்கூடம் இதுவாகும்.
ஆனால் வருட ஆரம்பத்தில் திருகோணமலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த இயந்திரத்தில் உள்ள மோட்டார் ஒன்று பழுதடைந்துவிட்டது. அதனால் ஜனவரி 24ஆம் தகதியிலிருந்து இத்தகனக்கூடம் பாவனைக்குட்படுத்தப்படாது உள்ளது. திருகோணமலை நகரசபையின் சபைக்கூட்டத்தில் இது கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது திருமலை மக்களை விசனமடைய வைத்தது.
அத்துடன் இந்த வாயு தகனக்கூடத்தை தொழிநுட்ப ரீதியாக இயக்கும் உத்தியோகத்தர் இது தொடர்பான பயிற்சி ஏதும் பெற்றிறாதவர் என்பதுடன் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளே இதனை இயக்கும் பரிதாப நிலையும் இங்கு காணப்பட்டு வந்தது. பிற மாவட்ட வாயு தகனக்கூடங்களைப்போல் இவ்விடம் சுகாதாரமாகவோ துப்பரவாகவோ காணப்படுவதில்லை.
அவ்விடத்தால் செல்லும் போது முகத்தை சுளிக்கும் நிலையிலேயே இந்தச் சூழல் காணப்படுகின்றது. அத்துடன் தகனம் செய்யப்படும் உடல்களின் எச்சங்களும் மிருகங்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே கிடப்பது அருவருப்பைத் தருகிறது. ஒரு நாளைக்கு அண்ணளவாக இரண்டுக்கும் மேற்பட்ட நல்லடக்கங்கள் இடம்பெறுகின்றன. இருந்தும் பராமரிப்பற்ற நிலையிலேயே இம் மயானம் காணப்படுகின்றது.
இந்த மயானத்தை பராமரிக்கும் பணியானது திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொறுப்பிலேயே கடந்த பல வருடங்களாக இருந்தது. இதில் அவர்கள் வருடாந்தம் ஒரு சிரமதானப் பணியினை நிகழ்த்துவது வழக்கம் தற்போது இப்பணி தொடர்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? மயானக் காவலாளியாக பணிக்கமர்த்தப்பட்டவருக்கு ஒரு தங்குமிடம் உள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் எனும் பெயரில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இதிலே உள்ளவர்களில் சிறுவர்களும் பெண்களுமே அதிகமாக இருந்தாலும் அப் பெண்களோ கடந்த பல வருடங்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவது அப்பிரதேசத்தவர்கள் எல்லோரும் அறிந்ததே.
ஆனாலும் இவர்கள் அடிக்கடி பொலிஸாரால் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழமையான ஒன்றாகும். ஆனால் அவர்கள் தண்டனை பெற்று சிறிதுகாலத்தில் வெளியில் வந்துவிடுவார்கள். இனி என்ன.. பழைய குருடி கதவை திறடி கதைதான். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே காணப்படுகின்றது. கடந்த ஜீன் மாதம் மேற்படி மயானப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஏற்கனவே மயானத்தை பராமரித்து வந்த காவலாளியின் மனைவியின் சடலம் என இனம் காணப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் செ. விஜயசுந்தரம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். 'நாங்கள் தான் ஒரு காவலாளியை வைச்சனாங்கள். அவர் தவறான வழிக்கு போனதால நாங்க அவரை நிற்பாட்டிட்டம். காவலாளிக்கு உரிய பாதுகாப்பு வீட்டை நாங்கள் பூட்டுப்போட்டு பூட்டினோம். கோபத்தில் அவர் பாதுகாப்பு படையினரின் உதவியோட அதை உடைச்சி அதுல கொஞ்சம் பொம்புளைகள வைச்சி விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்.
இது சம்பந்தமாக நாங்கள் பொலிஸிற்கு அறிவிச்சனாங்கள. இங்கு விபச்சாரம் நடக்குது அதை நிற்பாட்டுங்க எண்டு நாங்கள் பதிவுத் தபாலில திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் (நநட) க்கு ஒரு கடிதம் அனுப்பினம். ஒரு பதிலும் இல்ல. அந்த இடத்துக்கு பாதுகாப்புப் பணியில இருக்கிற ஆக்கள்தான் விபச்சாரத்துக்கு போறாங்கள். இந்து மயானமும் ஒரு சிங்களப் பகுதியை அண்டித்தான் இருக்குது.
அங்க இருக்கும் சிங்கள ஆக்கள் மற்றும் பாதுகாப்பு படையில உள்ளவங்க சம்மந்தப்பட்டுத்தான் இது நடக்குது. இப்ப அதுக்கு ஒரு பிரதான கேட் ஒன்றைச் செய்து போட இருக்கிறம். ஏற்கெனவே அந்த வீட்டை பூட்டு போட்டு பூட்டினம். திரும்பி உடைச்சிப் போட்டு அதுக்குள்ள இருக்கிறாங்கள். என்றவரை மறித்து இந்த அத்துமீறல் தொடர்பாக குறிப்பிட்ட பெண்களுடன் கதைத்தீர்களா? என்று கேட்டோம்.
நான் ஒருநாள் அந்தப் பகுதிக்கு போனனான். அங்க இருந்த பொம்புளைகள் என்னக் கண்டு ஓட வெளிக்கிட்டவங்கள். அப்ப அங்க இருந்த காவலாளி சில ஆக்களுக்குச் சொல்லி அவங்க என்னையும் துரத்த வெளிக்கிட்டவங்கள். அதுக்குப் பிறகு நானும் அந்த பக்கம் போறதில்ல. 40, 50 வருடங்களாக நாங்க இந்த மயானத்த நிர்வகிச்சுக்கொண்டு வாறம். இப்போ என்ன செய்யிறதெண்டு தெரியாம ஒரு இக்கட்டான நிலைமையில இருக்கம்' என்று தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொர்பாக நாம் திருகோணமலை நகர சபை செயலாளர் அ.க.ங. நஃபீல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். 'இவ்வளவு காலமும் இந்து மயானத்தை இந்துப் பேரவைதான் நிர்வகித்துக்கொண்டு வருகின்றது. அதை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று ஒரு திட்டத்தை நகர சபை தலைவர் கொண்டு வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் இதனை நாங்கள் கையேற்று அதனை நிர்வகிப்போம்.
இப்போதும் சிரமதான பணிகளை முன்னெடுக்கின்றோம். உள்ளுராட்சி வாரத் திட்டத்துக்குக் கீழ் இதனை உள்வாங்கியிருக்கிறம். இதன் அடிப்படையில் மரங்களை நட்டு சிரமதானம் செய்து அதனை நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைய எடுக்கிறம். அதேநேரம் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் எங்கள் நகரசபையால நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கிறம். பொதுமக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர். நாங்கள் தலைவரின் கவனத்திற்கு இவ்விடயங்களை கொண்டு வந்திருக்கிறம். கூடிய விரைவில் அதனை நாங்கள் பொறுப்பேற்று எங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பயணம் செய்யும் வீதியில் இவ்வாறான பராமரிப்பற்ற மயானம் இருப்பதும் ஆச்சரியத்தை தருகின்றது. அதுமட்டுமல்ல மயானத்தையும் விட்டுவைக்காமல் அங்கு பிணத்துக்கு மேலே விபச்சாரம் நடாத்துகின்றனர்.
நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படையினரும் இதற்கு உடந்தையாக இருப்பது என்ன ஒரு அநியாயம்? பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படாதது பொலிஸாரின் மேல் நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்திருக்கிறது. நகர சபை செயலாளர் கூறியதைப்போல் விரைவில் இவ்வாறான சமூகசீரழிவுக்கு முடிவுகட்டப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திருமலை ராஜ்
நன்றி: "இருக்கிறம்"
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?