எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருக்கும்போது அனைத்து தகுதியும் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்தான் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தற்போது உள்ள கல்வி திட்டத்தில் ஸ்டேட் போர்டு,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன்,ஓ.எஸ்.எஸ்.எல்.சி என நான்கு வகையான கல்வி முறை அமலில் உள்ளது. அவற்றை மாற்றி ஒரே கல்வி திட்டமாக அறிவித்து சமச்சீர்ப் பாடபுத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு 99ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நடத்த வேண்டும்.தற்போது உள்ள சமச்சீர் கல்வியில் தரம் குறைவு என அரசு கூறிவருவதால் படிப்படியாக தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோல் அமிதாப் நடித்த இந்தி படத்தில் இடஒதுக்கீடு பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அந்த காட்சிகளை அகற்றிவிட்டு திரையிட்டதுபோல், இங்கும் திரையிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடைபெறும்.
தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி பா.ம.க.வின் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றம்சாற்றியுள்ளார். எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக உள்ளார். ஆனால் அனைத்து தகுதிகளையும் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்.
மேலும் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது 3 சர்வதேச விருதுகளை பெற்றியிருக்கிறார். இந்திய சுகாதார அமைப்பின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். 50ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5ஆண்டுகளில் முடித்துள்ளதாக பிரதமர் பாராட்டியிருக்கிறார்.
அவைக்கு ஒரு நாள் கூட வராத அழகிரியை விட, அவை வழங்கிய ஒருமணி நேரத்தில் 55 நிமிடங்கள் அன்புமணி பேசியிருக்கிறார். இதுவரை நான் எந்தவித பதவியையும் வகிக்கவில்லை. பா.ம.க நிறுவனராக மட்டுமே உள்ளேன். அன்புமணியை தவிர எனது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரவில்லை.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்அடிப்படையில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதுவரை மாறிமாறி திராவிட கட்சிகளை ஆட்சியில் அமரவைத்த பாவத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
ராஜிவ் கொலையாளிகளாக குற்றம்சாற்றப்பட்டவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?