கட்சி ஆரம்பித்த பிறகு இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்ற அளவு சென்ற சட்டமன்ற தேர்தலில் மரணஅடி வாங்கிய திமுக இப்போது கொஞ்சம் ஐ.சி.யூ.விலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் வகையில்; சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தெம்பாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.
"இது யாருக்கும் வெற்றி தோல்வி அல்ல" என்று கலைஞர் சொல்லிக்கொண்டாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் வெற்றி என்று நிரூபிக்கும் முயற்சியில், திமுக தொண்டர்கள் இறங்கியதை மறுக்க முடியாது. பட்டாசு வெடித்து, லட்டு கொடுத்து, சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு "கறுப்பு வெள்ளை சாயம்" பூசும் முயற்சி தமிழகமெங்கும் நடந்தது.
கலைஞர் டிவியும் பொதுமக்கள் உற்சாகம், தமிழகமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்று செய்திகளில் "கொண்டாடி" உற்சாகமானது.
பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்த திமுகவுக்கு, செயற்கை சுவாசமளித்த புண்ணியம் ஜெயலலிதாவுக்கே.
சமச்சீர் கல்வி விவகாரத்தை தவிர்த்து விட்டு, திமுக எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஸ்டாலினின் நடவடிக்கைகளை வைத்தே அளந்து விடலாம்.
தேர்தலின் போது ஊர் ஊராக சென்று, சென்று பிரச்சாரம் செய்த ஸ்டாலினுக்கு அந்த களைப்பு தீரும் முன் அடுத்த தொடர்பயணம் செல்ல வேண்டிய சூழல்.
கோவை சென்று வீரபாண்டி ஆறுமுகம், ப.ரங்கநாதன் மற்றும் ஜெ.அன்பழகன் ஆகியோரை பார்த்து விட்டு, பாளையங்கோட்டை வழியாக, தற்போது திருச்சியில் அவரின் முதல் கட்ட "ஊர் சுற்றலாம் வாங்க" நிகழ்ச்சி முடிவடைந்திருக்கிறது.
அடுத்தாக திஹார் செல்லக்கூடும். அவரின் இரண்டாம் கட்ட பயணத்தை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும். (அடுத்த கைது யார் என்பதை அவர் தானே முடிவு செய்ய வேண்டும்)
அண்மைச்செய்திகளின் படி, அடுத்ததாக தூத்துக்குடி செல்ல நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினின் இந்த தொடர் ஓட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணன் அழகிரி தான். அவர் வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து, சிறையில் பார்த்து விட்டு வந்த பின்னர் தான், ஸ்டாலினும் கியர் மாற்றி கிளம்ப தயாரானார் என்பது ஊரறிந்த பெரிய குடும்பத்து ரகசியம்.
இக்கட்டான இந்த சூழ்நிலையில், திமுகவுக்கு கொஞ்சம் உதவிய சமச்சீர் ஆயுதமும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்து விட்டது.
திமுக-வின் ஒரே பிரம்மாஸ்திரமாக இருந்த சமச்சீர் கல்வி என்னும் ஆயுதம் இப்போது காலாவதியாகி விட்டது என்பது தான் உண்மை.
திமுக-வின் அடுத்த போராட்டம் என்பது சிறை நிரப்பும் போராட்டம் தான். அதனை கிட்டத்தட்ட ஜெயலலிதாவே தற்போது நடத்திக்கொண்டிருக்கிறார்.
கட்சியினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறோம் என்று கிளம்பினால், நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்பது தான் எதார்த்தம்.
"ஆட்சியில் இருக்கும் போது பதவி சுகத்தை அனுபவித்தார்கள், இப்போது சிறைச்சாலை சோகத்தை அனுபவிக்கட்டுமே.... வினை விதைத்தவர்கள்; வினையை அறுக்கிறார்கள்... இதில் பரிதாபப்பட இருக்கிறது" என்ற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.
மக்கள் பிரச்சனைக்காக போராடலாம் என்றால், தற்போது மக்களுடைய பிரச்சனைகளாக இருக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை என்ற எதற்கும் திமுக முன் நிற்க முடியாது. இந்த பிரச்சனைகளின் காரணமாகத்தான் திமுகவுக்கு ஓய்வு கொடுத்து, முக்காடு போட்டனர் மக்கள்.
ஆட்சியில் இல்லாதபோது கட்சியை நடத்தி செல்வது என்பது தான், ஒரு தலைவனுக்கு சவாலான விஷயம். ஆட்சியில் இருந்தால் கூட அதிருப்தி ஆட்களுக்கு, வாரியத்தலைவர் பதவியாவது கொடுத்து, வாரியணைத்து போகலாம். இப்போது என்ன செய்ய முடியும்?
மொத்ததில் அரசியல் மங்காத்தாவில், இனி திமுகவின் அடுத்த கட்டம் என்பது ஜெயலலிதா செய்யப்போகும், தவறான ஆட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறது.
அரசியல் வித்தகர், நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையை, பல்வேறு விதமான பிரச்சனைகளை தாண்டி வந்தவர் என்ற பின்புலங்களை கொண்ட கலைஞர், தற்போது ஜெயலிலிதாவின் அடுத்த தவறுக்காக காத்திருந்து தான் அரசியல நடத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பது அந்த மூத்த அரசியல்வாதிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டமே.
அம்மா, சும்மா இருப்பாரா இல்லை அய்யாவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அன்புடன்
அசால்ட்டு ஆறுமுகம் (அரசியல் பிரிவு)
படங்கள் :விகடன்
http://snipgallery.blogspot.com
http://snipgallery.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?