ஒரு வழியாக சமச்சீர் பாடத்திட்டத்தினால் உண்டான பிரச்சனையை உச்சநீதி மன்றம் வரை சென்று, தீர்த்துக்கொண்ட சமயத்தில், அடுத்ததாக தனியார் பள்ளிகளின் "பெயர்" காரணமாக மீண்டும் நீண்டதொரு விவாதம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மெட்ரிக் பாடத்திட்டத்தினை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் பெயரில் இருக்கும் "மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்" என்பதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சமமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின் அனைத்து பள்ளிகளும் சமம் என்ற நிலையை உறுதிப்படுத்த, தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளின் பெயரில் இருந்து, மெட்ரிக் என்னும் வார்த்தையை நீக்க வேண்டும், மெட்ரிக் என்றொரு பாடத்திட்டமே இல்லாத நிலையில் ஏன் பெயரில் "மெட்ரிக்" என்பது நீடிக்க வேண்டும் என்பது சமச்சீர் கல்வியாளர்களின் கருத்து.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்னும் பெயரை, பெயரளவில் வைத்துக்கொண்டு அதன் மூலம் மீண்டும் கட்டணக்கொள்ளையில் தனியார் பள்ளி முதலாளிகள் ஈடுபடுவார்கள் என்பது அவர்களின் வாதம்.
இந்த விஷயத்தில் தமிழக அரசால் தாங்கள் கட்டாயப்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு போட இருப்பதாக தற்போது தனியார் பள்ளிகள் முடிவெடுத்துள்ளன.
உண்மையில் சமச்சீர் கல்வி குறித்த முனைவர்.திரு.முத்துக்குமரனின் பரிந்துரைகள் மொத்தம் 109. அதில் ஒன்றுதான் பொதுப்பாடத்திட்டம். தற்போது சமச்சீர் பாடத்திட்டம் என்ற ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கே அரசியல் சாயம் பூசப்பட்டதால் நீண்ட இழுபறியாகிவிட்ட்து.
அடுத்தடுத்த கட்டத்திற்கு இன்னும் ஏராளமான சிக்கல்கள் உண்டாகும் என்பதற்கான அறிகுறியே இப்போதைய பெயர் மாற்ற பிரச்சனை. இதற்கும் தெளிவான முடிவு செய்யப்பட்டால் தான் உண்மையில் சமச்சீர் கல்வி வந்ததாக அர்த்தம்.
மெட்ரிக் என்னும் வார்த்தையை இதுவரை பயன்படுத்தியதே தவறு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஏனெனில் மெட்ரிக் என்னும் வார்த்தைக்கு மேற்படிப்புக்கு தகுதி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு என்பது தான் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நுழைவுத்தேர்வு என்ற வகையில், மாநில பாடத்திட்டத்தின் ஆண்டு இறுதித்தேர்வு மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் ஏதற்காக அந்த பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தரப்பினர் முன் வைக்கும் வாதம்.
பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட்டால், பள்ளிக்கல்வியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்து , அவர்களின் கல்வி வியாபாரம் கொடி கட்டி பறக்கவே செய்யும் என்ற வாதத்தினையும் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் கடந்த பத்து,பதினைந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் அடைந்த "அசுர வளர்ச்சி" மிக அதிகம். (பள்ளிக்கட்டணம் அதிகரித்த அளவும் மிக அதிகம்)
இப்போது கூட சமச்சீர் கல்விக்கான ஆங்கில வழி பாடபுத்தகங்களை தனியார் பதிப்பகங்களின் மூலம் பெறப்போவதாகவும், தமிழ் வழி பாடப்புத்தகங்களை மட்டும் தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன.
பாடத்திட்டம், கல்வி அமைப்பு, கட்டட வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான ஆய்வக வசதிகள் என எல்லா வகையிலும் சமச்சீர் நிலை வந்தால் மட்டுமே உண்மையில் சமச்சீர் கல்வியை தமிழகம் அடைந்ததாக அர்த்தம். இல்லையெனில் அது வெறும் சமரச கல்வித்திட்டமாக மட்டுமே இருக்கும்.
எது எப்படியாலும், இந்த முறை எழுந்துள்ள பெயர் பிரச்சனையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவது இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கப்படக்கூடிய விஷயமாகும்.
http://snipgallery.blogspot.com
http://snipgallery.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?