மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி போயுள்ள நிலையில், மதுரையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அழகிரியிடம் ஒப்படைத்தார் அப்போதைய திமுக மேயர் தேன்மொழி.
இந்த நிலையில் இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை இன்று மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்துள்ளது. மேலும், அந்த இடத்தில் மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அலுவலகம் பறிக்கப்பட்ட தகவல் அழகிரிக்கு போயுள்ளதாம். அவர் தற்போது டெல்லியில் உள்ளார். திஹார் சிறையிலிருந்து விடுதலையான தங்கை கனிமொழியை வரவேற்க டெல்லி போன அழகிரி, கனிமொழியை தனது வீட்டில்தான் தங்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மதுரை திரும்பியதும் அலுவலகத்தை மீட்கும் நடவடிக்கையில் அவர் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?