புதிய உரக் கொள்கையை ரத்து செய்துவிட்டு, பழைய உரக் கொள்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
''இந்தியாவின் முதன்மைத் துறையான வேளாண்மைத் துறையின் முக்கியத்துவம் கருதி, அனைத்து வகை உரங்களுக்கும் மானியம் வழங்குவதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது.
அனைத்து வகை உரங்களுக்கான அதிகபட்ச விலையையும், மத்திய அரசே நிர்ணயித்து வந்தது.
ஆனால், ஊட்டச்சத்துக்கு ஏற்ப உர மானியம் என்கிற புதிய உரக் கொள்கையால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கொள்கையின்படி, யூரியா தவிர்த்து பிற உரங்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதென மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது.
இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 350-ஆக இருந்த ஒரு மூட்டை (50 கிலோ) காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை இப்போது ரூ. 800-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் டிஏபி உர மூட்டை ரூ. 475-லிருந்து ரூ. 975-ஆகவும், பொட்டாஷ் உர மூட்டை விலை ரூ. 225-லிருந்து ரூ. 560-ஆகவும் உயர்ந்துள்ளன.
வழக்கமாக உரத்தின் விலை 5 முதல் 10 சதவீதம் மட்டுமே உயரும். ஆனால், இப்போது விலை 150 சதவீதம் உயர்ந்துள்ளது. உரத் தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்தியாவுக்குத் தேவையான டிஏபி உரம் 90 சதவீதமும், பொட்டாஷ் உரம் 100 சதவீதமும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உலக சந்தையில் உர விலை மாறும்போது, அதே விலை கொடுத்து ஏழை விவசாயிகளால் வாங்குவது கடினம்.
இந்தியாவில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து மானிய விலையில் உரம் வழங்க வேண்டியது அரசின் கடமை. இல்லையெனில் விவசாயிகள் கடனில் சிக்கி, தற்கொலை செய்துகொள்ளும் நிலைதான் ஏற்படும்.
எனவே, புதிய உரக் கொள்கையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய உரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?