2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த 5 கார்பரேட் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் திமுக எம்பி கனிமொழி மற்றும் 4 பேருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்றிரவு 7.30 மணிக்கு கனிமொழி திகாரில் இருந்து வெளியே வந்தார். வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னை வருகிறார்.
2ஜி ஊழல் வழக்கில் கைதானவர்களில் இதுவரை ஒரு முறை கூட ஜாமீன் கோராதவர் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தான். கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்தபோது ராசாவிடம் நீங்கள் ஜாமீன் கோரவில்லையா என்று கேட்டதற்கு, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான முடிவு தெரியட்டும்.அதன் பிறகு எனது முடிவை நான் தீர்மானிப்பேன் என்றார்.
தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்வாரா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு.
இருப்பினும் இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜாமீன் தொடர்பாக என்னுடன் இதுவரை ராசா கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம். எனவே ராசாவின் மனதில் என்ன இருக்கிறது என்பது புலப்படவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?