Saturday 1 October 2011

தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்! - கருணாநிதி

 
 
தூக்கத்தில் உயிர் போகுமா? தூக்கில் உயிர் போகுமா? என்று ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். இது அப்படியெல்லாம் போகும் உயிர் அல்ல. எனது உயிர் தமிழ்த்தாய் மடியில் தான் போகும், என்று கருணாநிதி பேசினார்.
 
தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
 
விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பெரியார், அண்ணா, பாவேந்தர் மற்றும் கலைஞர் விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தி.மு.க.வின் சிறப்பு வாய்ந்த இந்த முப்பெரும் விழாவில் கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இதையும் அரசியலாக்கி விடுவார்கள்.
 
கடந்த சில வாரங்களாக நான் சொல்லியும் கேட்காமல் புயல் வேகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டார். இதனால் 2 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகவே இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
 
கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று பலரும் சொன்னார்கள். இப்போது தி.மு.க. தோற்று விட்டதா என்று எத்தனையோ பெரியவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கேட்கிறார்கள்.
 
ஏதோ தவறு செய்து விட்டோம் என்று இப்போது தாய்மார்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் யோசிக்கிறார்கள். இதில் ஒரு மகிழ்ச்சி. மலையை தூக்கிக் கொண்டு வருவோம் என்று ஏமாற்றிய காரணத்தினால்தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் மலையை உருட்டிக் கொண்டு வரவில்லை. மலையை தலையில் தூக்கி வையுங்கள் உருட்டி விடுகிறேன் என்று கூறுபவர்கள்தான் இப்போது உள்ளார்கள்.
 
ஜனநாயக விளையாட்டு
 
ஜனநாயக விதியால் ஏற்பட்ட ஆட்சியை நாம் தாங்கித்தான் கொள்ள வேண்டும். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதியில்தான் நாம் வெற்றி பெற்றோம். பின்னர் படிப்படியாக வளர்ந்து ஆட்சியை பிடித்தோம். இப்போது தோற்றிருக்கிறோம். இது ஜனநாயகத்தின் விளையாட்டு.
 
இன்றைய தினம் தமிழகத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை தூக்கில் போடக்கூடாது என்று ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. 3 பேரை காப்பாற்றப்போகிறோம். அந்த உயிர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
 
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதாது. அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதை கவர்னரின் கவனத்துக்கு அனுப்பி, குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்து அனுப்பினால்தான் தண்டனையை தடுக்க முடியும்.
 
அந்த 3 பேரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி காலத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு நான் கடைபிடித்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
 
என் பார்வையில் இருந்த போலீஸா இது?
 
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சியினரை கைது செய்து இருப்போமா? பொய் வழக்கு போட்டு சிறையில், தனிச் சிறையில் அடைத்திருப்போமா? இப்போது சென்னையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலும், பாளைங்கோட்டையில் கைது செய்து திருச்சி சிறையிலும் அடைத்து வேதனைப்படுத்தி, வாட்டி வதைக்கிறார்கள். என் பார்வையில் இருந்த போலீஸ்காரர்களா இவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
 
இதற்கு ஒரு விடிவு காலம் வரும். ஆனால் ஜனநாயக முறைப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் ஆட்சி மாறும். துரைமுருகன் கூறியது போல் நாங்கள் மைனாரிட்டி ஆட்சிதான் நடத்தினோம். அது மைனாரிட்டி மக்களுக்கான அரசு. தட்டிக் கேட்டவர்களை தோழமை கட்சிகளாக ஆக்கிக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியை கட்டி காப்பாற்றினோம்.
 
பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்த மக்களை, நம்பி இருந்த தோழமை கட்சிகளை விரட்டலாமா? தி.மு.க. அரசு மைனாரிட்டியாக இருந்தாலும், எல்லோரையும் அரவணைத்து 5 ஆண்டுகால பொற்கால ஆட்சியை தந்தது. அந்த பொற்கால ஆட்சி இப்போது கற்கால ஆட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
 
தமிழ்த்தாய் மடியில் தான் உயிர் போகும்
 
ஒரு அமைச்சர் சொல்கிறார் கருணாநிதியின் உயிர் தூக்கத்தில் போக போகிறதா? அல்லது தூக்கில் போகப் போகிறதா? என்று கேட்கிறார். தூக்கமோ தூக்கோ கருணாநிதி உயிர் தமிழகத்திலே தமிழ்த்தாயின் மடியில்தான் போகும். இவர்களை போல 'அம்மா' மடியில் போகாது.
 
தேசிய கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அந்த கொடியை மாத்திரம் ஏற்றலாமா? என்று பொன்முடி கேட்டார் என்பதற்காக அவருக்கு ஜாமீன் கூட கொடுக்காத தண்டனை வழக்கு.
 
கருணாநிதியின் உயிர் தூக்கத்திலோ, தூக்கிலோ போகும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். உயிரைப் பற்றி என்றைக்கும் நான் கவலைப்படுபவன் அல்ல. உயிரை பற்றி கவலைப்பட்டிருந்தால் கல்லக்குடி போராட்டத்திலே அதை போக்கியிருப்பேன். உயிரைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே பாம்புகளும், தேள்களும் நிரம்பிய அந்த சிறையிலே உயிரைப் போக்கியிருப்பேன்.
 
என் உயிர் தூக்கத்தில் போகிற உயிர் அல்ல. துக்கத்திலே போகிற உயிரும் அல்ல. இந்த உயிர் எப்போது போகும் என்றால் தமிழன் தமிழனாக, தன்மானத்தோடு வாழ்கிறான் என்ற நிலை உருவான பின்பு தான் இந்த உயிர் போகும். எனது உயிரை பணயமாக வைத்து நடைபெறுகின்ற போராட்டத்தில், இனப்போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்," என்றார்.
 
விருதுகள்
 
'பெரியார்' விருது திராவிட இயக்க சிந்தனையாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கும், 'அண்ணா' விருது தி.மு.க. சட்டத் துறைச் செயலாளரும், சிறந்த தொழிற்சங்கத் தலைவருமான வக்கீல் ஆர்.எஸ்.பாரதிக்கும், 'பாவேந்தர்' விருது நெல்லை மாநகராட்சியின் மேயராக சிறப்பாக பணியாற்றிய திருநெல்வேலி உமாமகேஸ்வரிக்கும், 'கலைஞர்' விருது தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் தி.அ.முகமதுசகிக்கும் வழங்கப்பட்டது.
 
விருதுடன் ரூ.1 லட்சம் பொற்கிழி, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
 
மாணவிகளுக்கு பரிசுத் தொகை
 
பிளஸ்-2 தேர்வில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சமும், முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பாரதிதாசனார் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 4 பேருக்கு தலா ரூ.3 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
 
மேலும், சிறந்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு தலா ரூ.20 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger