Saturday, 1 October 2011

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர��க் கதை (பாகம் 3)



கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம்.

மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்​கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது.

'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதை​களும் இருக்கு. மரியாதையா இப்பவே உன் வயித்தில வளர்ற குழந்தையைக் கலைச்சிடு. இல்லைன்னா, நாங்களே கலைச்சிடுவோம். அது இன்னும் மோசமா இருக்கும்!' என அதிகாரிகள் மிரட்ட, நளினிக்கு குலைநடுங்கிவிட்டது. இதுபற்றி அவள் என்னிடம் கலந்து ஆலோசிக்கக்கூட வழி இல்லாத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகப்படுத்தினர்.

'உங்களோட அத்தனை சித்ரவதை​களையும் நாங்க பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிறதுக்குக் காரணமே, என் வயித்தில வளர்ற சிசுதான். நீங்க என்ன சொன்னாலும் அதைக் கலைக்க மாட்டேன்!' என முடிந்த மட்டும் போராடி இருக்கிறாள் நளினி.

அடுத்த கட்டமாக இன்னொரு முயற்சியையும் அதிகாரிகள் நடத்திப் பார்த்தார்கள். என் மாமியார் பத்மா அவர்களையும், மைத்துனர் பாக்கியநாதனையும் மிரட்டி, 'குழந்தையை அழிக்கச் சொல்லுங்கள். இல்லையேல், நாங்கள் சொல்வதற்கு எல்லாம் ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள்!' எனச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டரை மாத சிசுவைச் சிதைக்க அதிகாரிகளுக்கு என்ன ஒரு ஆர்வம்?

சிசுவை அழிக்க மட்டும் அல்ல... என்னையும் நளினியையும் கணவன் மனைவி இல்லை என்று போலியாக நிரூபிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். நாங்கள் சைதாப்பேட்டையில் கைதானபோது, நளினியின் கழுத்தில் தாலி இருந்தது. பெர்சனல் சர்ச் மெமோவில் (Ex.C.18 என்ற Personal Search memo) அந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் கஸ்டடியில், 'நாங்கள் இருவரும் கணவன் - மனைவி' எனச் சொல்லி இருக்கிறோம். ஜுடீஷியல் கஸ்டடிக்கு வந்தவுடன், 'நாங்கள் இருவரும் கணவன் மனைவி' எனக் குறிப்பிட்டு பல மனுக்களை சிறப்பு நீதிமன்றத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பல்வேறு பரிகாரம் வேண்டி எழுதி உள்​ளோம். இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. அதிகாரிகள் என் மனைவிக்கு எதிராகத் தயார் செய்த ஆவணங்களான எக்ஸ்.பி. 75, 76, 77 (Ex.p.75, 76, 77) கன்ஃபெஷனல் ஸ்டேட்மென்ட் (Confessional statement), 78, 634, 1206, 1209, 1422, 1424, 1427, 1428 ஆகிய அனைத்திலும் என் மனைவியை மிஸ் நளினி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். இது எத்தகைய குரூர வில்லத்தனம்?

எப்படியாவது என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிடலாம் என்று நம்பியே முன்ன​தாகவே ஆவணங்களில் நளினி கல்யாணம் ஆகாதவர்போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்த முயற்சியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கொலையை விசாரிக்க வேண்டியவர்கள், ஒரு சிசுவை அழிக்கவும், ஒரு குடும்பத்தைச் சீரழிக்கவும்தான் போராடினார்கள்.

அடுத்து, பத்திரிகையாளர்களிடம் அவர்கள் பந்திவைத்த செய்திதான் குரூரத்தின் உச்சம். 'முருகனும் நளினியும் திருமணம் செய்துகொள்ளாமலே உடல் உறவு வைத்துக்கொண்டவர்கள்' என தாம்பத்​தியப் புனிதத்தைத் தலை முழுகும் கொடூரத்தைப் பரப்பினார்கள். என் மனைவியை வேறு சில ஆண்களுடன் தொடர்புபடுத்தியும் கொச்சைப் பரப்புதலில் குளிர் காய்ந்தார்கள். இவை குறித்​தெல்லாம் டிரையல் கோர்ட்டில் சி.ஆர்.பி.சி. செக்ஷன் 313-ன் கீழ் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் கண்ணீரோடு சொன்னோம். ஆனால், நிம்மதிக்காக ஏங்கிய எங்களின் குரல் நீதிமன்றத்தின் கம்பீரக் கதவைத் தட்ட முடியாமல் தோற்றுத் திரும்பின.

அடுத்தடுத்த நாட்களில் தினசரிகளைப் புரட்டி​னால், பக்கத்துக்குப் பக்கம் முருகனும் நளினியும்தான்... 'நளினியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தகப்பன் யார்?', 'புலிகளின் மூத்த தளபதிதான் நளினியின் காதலன்' என நெஞ்சை நொறுக்கும் தலைப்புகள். எங்களுக்காக ஒரு குவளை நீர்கூட கொடுக்காத அதிகாரிகள் அந்த செய்திகளைத் தாங்கி வந்த தினசரிகளை வலிய வந்து கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு நாங்கள் துடித்த துடிப்பை ரசித்தார்கள். மனம் மரத்துப்போகிற அளவுக்கு அத்தனை அவதூறுகளையும் எழுதவைத்தார்கள். 'என்ன எழுதினாலும் சரி, நான் என் மனைவிக்கும், என் மனைவி எனக்கும் உண்மையாக இருக்கிறோம். இதை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது!' என நெஞ்சுக்குள் தைரியம் வார்த்துக்கிடந்தோம். அப்போதுதான் அவதூறின் அடுத்தக் கட்டத் தாக்குதல் மீடியாக்களில் ஆரம்பித்தது. 'நளினியின் குழந்தையைக் கொல்ல முருகன் முயற்சி' எனத் தலைப்பிட்டு, உள்ளே நா கூசும் கற்பனைகளைக் கடைவிரித்தனர்.

எழுத்தால் - பிரம்பால் - அவ​தூறால் - ஆணவத்தால் எங்களை அழிக்க அதிகாரிகள் தீட்டிய அத்​தனை திட்டங்களையும் தவிப்போடு தாங்கிக்கொண்டோம். 'இனி அழக் கண்ணீர் இல்லை' என்கிற நிலையிலும், 'இனி எம் மீது பாய்ச்ச அதிகாரிகள் எங்காவது போய் சித்ரவதைகளைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் உண்டு' என்கிற சகலத்​தையும் கடந்த சலிப்பும் எங்களை உறுதிகொள்ள வைத்தது.

இத்தனை தடைகளைத் தாண்டி, நளினியின் வயிற்றில் ஆரித்ரா பிறந்தாள். சிறைக்குள் பிறந்தது அவள் எந்தப் பிறவியில் செய்த பாவமோ... ஆனால், எங்கள் வயிற்றில் அவள் பிறந்தது பெரும்பாவம். சிறையில் குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது எமது சட்டரீதியான உரிமை. ஆனாலும், எமக்கு அது மறுக்கப்பட்டது. அதனால், ஆறு நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தோம். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, பட்டினிகிடப்பது எத்தகைய கொடூரம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பால் வற்றிப்போனது; ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போய் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்கியது. தாயும் மகளும் மடிகிற நிலையானால் சிக்கல் வந்துவிடுமே எனப் பயந்து என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தார்கள். நாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன் இந்து திருமண சட்டப்படி செய்துகொண்ட திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்ய மறுத்த கதையும் நடந்தது. அதற்காக அடுத்தக் கட்ட உண்ணாவிரதம்!

பட்டினி கிடப்பதுதான் எமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் ஒரே ஆதாரமாக விளங்கியது. உடலை வருத்தி, உணவுக் குடலைச் சுருக்கி, நா வறண்டு, 'இதுதான் கடைசி நாளோ?' எனக் கண்களுக்குள் பயம் படர்ந்து... மொத்தமாக 25 நாட்கள் உண்ணாவிரதம். சாகும் நிலை வரப்போகிறது எனத் தெரிந்த பிறகுதான், அதிகாரிகளின் மனதில் மாற்றம் பிறந்தது.

1995-ம் ஆண்டு எங்களுடைய திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்துகொண்டோம். 'குற்றவாளிகள் இல்லை' எனப் போராடி இருக்க வேண்டிய நாங்கள், உண்மையான தம்பதி என்பதை நிரூபிக்கவும், எங்கள் மகளைக் காக்கவுமே படாத பாடுபட்​டோம்.

கருவிலேயே நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை கொடூரங்களையும் சந்தித்து​விட்ட என் மகள் ஆரித்ரா, இன்றைக்கு லண்டனில் பயோ மெடிக்கல் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறாள். மிருகங்​களுக்கு மத்தியில் சிக்கிய சினை ஆடாக, வயிற்றுக்குள்வைத்து அவளை எப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தோம் என்பதை இன்றைக்கு நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. வயிற்றுக்குள் இருந்தபோது மட்டும் அல்ல... வளர்ந்து ஆளாகி அவள் நிற்கும் வேளையிலும் 'மகளே...' என வாய் நிறைய அழைக்க முடியாமலும், அவள் முகத்தைப் பார்க்க முடியாமலும் நாங்கள் படும்பாடு, ஆயிரம் தண்டனைகளுக்குச் சமம்!

எனக்கு தூக்குக்கான தேதி அறிவிக்கப்பட்டது குறித்து 'விகடன்' நிருபர் ஆரித்ராவிடம் பேட்டி எடுத்தபோது, 'அப்பாவை முதல் முறையா சந்திச்சப்ப, 'ஏம்ப்பா இப்படிப் பண்ணினீங்க?'னு கேட்டேன். இன்னிக்குப் புரியுது... நான் கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு... அப்பா, என்னை மன்னிச்சிடுங்கப்பா'னு ஆரித்ரா பதில் சொல்லி இருந்தாள். ஒரு தாய், தகப்பனாக ஆரித்ராவுக்கு எதுவும் செய்ய முடியாமல், 'கொலைகாரனின் மகள்' என்கிற பழிப் பெயரை வாங்கிக்கொடுத்த நாங்கள்தான் ஆரித்ராவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எந்த சிசுவை அழிக்க நினைத்தார்களோ... அதுதான் இன்றைக்கு எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவள் உலகத்தின் ஏதோ ஒரு திசையில் இருந்தாலும், எங்களின் வாரிசாக இருக்கிறாள் என்கிற ஆறுதலே எமக்குப் போதும்.

காயங்கள் ஆறாது...

ஜூனியர் விகடன்

http://tamil-video.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger