சென்னை எம்எம்டிஏ காலணியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும், சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ந.மனோகரனை ஆதரித்தும் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் பேசிய வைகோ,
மனோகரன் கட்சிக்காக மட்டும் பாடுபட்டவர் அல்ல. தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் பாடுபட்டு வருகிறார். டெல்லியில் நடந்த ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத்தில் தனது சொந்த செலவில், ஈழ உறவுகள் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகளை, நம் கண் முன்னே நடப்பது போல பிளக்ஸ் போர்டில் வைத்திருந்தார்.
மதிமுக எப்போதும் மக்களுக்காக மட்டும் பாடுபட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையாகட்டும், முல்லை பெரியாறு, ஸ்டைர்லைட் ஆலை பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் மதிமுகவே முன்நின்று போராடி வருகிறது. நாங்கள் காசுக்கோ, பதவிக்கோ ஆசைப்படுபவர்கள் அல்ல.
கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த குழுவினரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து, மக்களுக்கு அணுமின் நிலையம் தொடர்பான பயம் விலகிய பிறகு, அணுமின் நிலையம் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். 7 அடி ஆக இருந்தாலும், 20 அடி ஆக இருந்தாலும் மக்களுக்கு ஆபத்துதான். மக்களுக்கு பயம் போய்விட்டால் துவக்கி வைத்துவிடுவீர்களா. அந்த இடத்தில் அணுமின் நிலையமே கூடாது என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு.
எனக்கு தூக்கு தண்டனை வந்திருந்தால் கூட, நான் போய் கேட்டிருக்க மாட்டேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் என்னுடைய தமிழ் உறவுகள் என்பதால், தமிழக அரசிடம் மன்றாடினேன். ஏன் என்றால் மத்திய அரசு மூன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று ஆணைபிறப்பித்துவிட்டது. அதை தடுக்கும் சக்தி தமிழக அரசுக்கு மட்டுமே இருந்தது. முதல்வர் மனது வைத்தால் நடக்கும் என்பதால், நான் பொருத்திருந்து அவர்களிடம் மன்றாடினேன். மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முதல்வர் தீர்மானம் நிறைவேற்றினார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
சமச்சீர் கல்வி பிரச்சனையில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களின் மனதை புண்படுத்தினார்கள். பள்ளிக் குழந்தைகளின் கல்வியை கேள்விக் குறியாக்கினார்கள். புத்தகமே இல்லாமல் வகுப்புகளில் மாணவர்கள் நேரத்தை வீணடித்தார்கள். இந்தக் கட்டத்தில் தமிழக அரசை நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். எனவே நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம். கெட்டது நடந்தால் எதிர்ப்போம்.
எங்களுடைய வேட்பாளர்கள் மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் நேரடியாக வந்து தீர்த்து வைப்பார்கள். உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தெரிவித்தால், உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மதிமுக வேட்பாளர்கள் என்றுமே நேர்மையானவர்கள். நியாயமானவர்கள். ஆகையால் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். எங்களிடம் பணம் இல்லை. பலம் இல்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. கூடவே நீங்கள் ஆதரவு அளித்தால் இன்னும் எங்கள் பலம் கூடும். மக்களுக்கு செய்ய வேண்டியதை இன்னும் அதிகமாகவும், விரைவாகவும் செய்வோம்.
சென்னையில் மொத்தம் 44,86,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள். உலக அளவில் 10 லட்சம் பேர் இருக்கும் நாடுகள் உண்டு. இவ்வளவு வாக்காளர்கள் கொண்ட சென்னையில், மேயர் பதவி எவ்வளவு முக்கியத்துவமானது. மேயராக வருபவர் எவ்வளவு நல்லவராக இருக்க வேண்டும் என்பதை மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். எங்கள் மேயர் வேட்பாளர் உங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்.
மதிமுக வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கண்டிக்கவும் வேண்டாம். ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் அணுமதி அளித்தால் மட்டுமே நோட்டீசை கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும். தொந்தரவு செய்யக் கூடாது. கண்டிப்பாக நாம் வெற்றிப் பெற்றே தீருவோம். ஒரு ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது என்றார்.
http://tamil-video.blogspot.com
http://tamil-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?