Tuesday 30 August 2011

நீதி வேண்டி தீக்���ுளித்து நெருப்பாகிவிட்டாள் செங��கொடி: வைகோ



நீதி வேண்டி தீக்குளித்து நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த கண்ணகி விழாவில் வைகோ பேசுகையில், இலக்கிய அமைப்புகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்பதே பலருக்கு புரிவதில்லை. தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயர் பண்புகளை எடுத்துரைக்கவும், அந்த பண்புகளை நம் சமூகம் கடைபிடித்து நடக்கவும் தான் இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்று முன்னோடியாக உள்ள நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஆடைகளின்றி காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்தபோது, நம் சோழ நாட்டு மக்கள் பகலில் பட்டும், இரவில் பருத்தி ஆடையும் அணிந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம்.

உலகத்திற்கு ஆடை அணியும் நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள். இன்று உலகிற்கே ஆடை வழங்குவதும் தமிழகம் தான். அப்படி இருக்கையில் சேனல் 4 தொலைக்காட்சியில் தமிழ் சகோதரி இசைப்பிரியாவை ஆடைகளை அவிழ்த்து காட்டும் காட்சிகளைப் பார்க்கையில் நம் ரத்தம் கொதிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் ஒரு தவறும் செய்யாத தன்னுடைய கணவனை பாண்டியன் நெடுஞ்செழியன் தண்டித்ததால் வெகுண்ட கண்ணகி மதுரை மாநகரையே எரித்தாள்.
ஆனால் இன்று உடன் பிறவா சகோதரன் பேரறிவாளன் குற்றமற்றவன் என்பதை உலகிற்கு கூற காஞ்சியில் தன்னைத் தானே எரித்து நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்னும் தமிழ் சகோதரி.

பத்தினி தெய்வம் கண்ணகியின் சாபத்திலும் நீதியிருந்தது. இந்த செங்கொடியின் சாவிலும் நீதியுள்ளது. நீதி வென்றே தீரும். கடந்த 1931ம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் தூக்கு தண்டனை கூடாது என்றார்.

ஒரு மனிதனை தேதி குறித்து கொல்லும் கொடூரம் கூடாது என்று பண்டித நேருவும் கூறினார். 1941-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாத்தின்போது பேசிய அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றே தெரிவித்தார்.

உலக நாடுகளில் 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்துவிட்டன. நம் நாட்டிலும் நீண்ட காலமாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

ஸ்ரீபெரும்புதூரி்ல் நடந்த சம்பவத்திற்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதே கொலை வழக்கில் 24 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று கூறப்பட்டதோ அதேபோன்று இந்த 3 பேரும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டும்.

அன்று பாண்டிய மன்னனின் அரண்மனையில் நடந்த கொடூரம் இன்று தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. தமிழக முதல்வரால் இதை தடுக்க முடியும். எனவே, நாடே அவரின் முடிவைத் தான் எதிர்பார்த்துள்ளது என்றார்.

உயிர் நீத்த செங்கொடிக்கு வைகோ, திருமாவளவன் அஞ்சலி:

இந் நிலையில் தீக்குளித்து உயிர்நீத்த இளம் பெண் செங்கொடியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் செங்கொடி. அவரது கருகிப் போன உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் மருத்துவமனைக்கு வைகோ, திருமாவளவன், இயக்குநர் அமீர், முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

செங்கொடியின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் வைகோ கூறுகையில்,

பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற செங்கொடி எனும் வீரப்பெண்மணி தன் உயிரையே தியாகம் செய்துள்ளார். அவரது இந்த தியாகம் உலகையே தீ மூட்டியுள்ளது. உயிர் விலை மதிப்பில்லாதது. இனி எந்த இளைஞரும், இளம் பெண்ணும் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது.

நமது கோரிக்கைகளை போராடி வெற்றி பெற வேண்டும். செங்கொடியின் உயிர் தியாகத்தை மதிக்கும் வகையில் மூன்று பேரின் தூக்கு தண்டனையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.

திருமாவளவன் கூறுகையில்,

தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல் முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல.

நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

இந்த நிலையில் செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை ஊர்வலமாக எடுத்து வந்து காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக உடலை வைத்தனர்.

அங்கு தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 4 மணிக்கு மேல் உடல் கீழ்க்கதிர்பூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை காலை வரை அஞ்சலிக்காக வைக்கவுள்ளனர். நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

உயிரை மாய்க்காதீர்கள்-நெடுமாறன்

3 தமிழர் உயிர் காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம்பெண் தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

முதல்வரிடம் முறையிடுவது, நீதிமன்றத்தில் வாதாடுவது, மக்களைத் திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்றுபட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களைக் காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதைச் செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

3 உயிர்களைக் காக்க தொடர்ந்து போராடுவதற்குப் பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணை காட்டுங்கள்-சோனியாவுக்கு தா.பாண்டியன் கோரிக்கை

நளினியை மன்னித்ததன் மூலம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய தியாகத்தின் காரணமாக உங்களுடைய குரல் மற்ற எவரின் குரலையும்விட வலுமிக்கதாக அமையும். எனவே மற்ற மூவருக்கும் கூட அதே பெருந்தன்மையைக் காட்டி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கொடூரமான செயலுக்குப் பின் பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பெரும்பாலான சதிகாரர்கள் உரிய முறையில் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு முறையாக தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் நாளன்று மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள மூன்று இளைஞர்களின் பிரச்னை உள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான நளினியை மன்னித்ததன் மூலம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய தியாகத்தின் காரணமாக உங்களுடைய குரல் மற்ற எவரின் குரலையும்விட வலுமிக்கதாக அமையும். எனவே, தண்டிக்கப்பட்டவர்களின் உயிர்களுக்காக குரல் கொடுங்கள் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger