Tuesday, 20 December 2011

ராஜாவும், கனிமொழியும் அடிக்கடி சந்தித்தது அம்பலம்

 
 
"தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவை, அவரது அலுவலகத்திலும், வீட்டிலும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, சஞ்சய் சந்திரா, ஷாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோர் பல முறை சந்தித்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்,'' என, ராஜாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் ஆசிர்வாதம் ஆச்சாரி, சி.பி.ஐ., கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சிகள் விசாரணை, கடந்த நவம்பர் 11ம் தேதி முதல், டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ராஜாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் ஆசிர்வாதம் ஆச்சாரியை, சி.பி.ஐ., வழக்கறிஞர் ஏ.கே.சிங் நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.
 
அப்போது ஆசிர்வாதம் கூறியதாவது:மத்திய அமைச்சராக ராஜா இருந்த போது, அவரை அவரது வீட்டிலும், அலுவலகத்திலும், தி.மு.க., எம்.பி., கனிமொழி பலமுறை சந்தித்தார். அதேபோல், ராஜாவும் பலமுறை, கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்தார். கனிமொழியும், சரத்குமாரும், கலைஞர் "டிவி' துவங்குவது தொடர்பாக ராஜாவை தொடர்ந்து சந்தித்துப் பேசி வந்தனர்.மேலும், கலைஞர் "டிவி' தொடர்பாக, நிரா ராடியாவும் ஒரு முறை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, "கலைஞர் "டிவி'யை டாடா ஸ்கை மூலம் ஒளிபரப்பு செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன' என்றார். ராடியாவுடன் நான் பேசிய உரையாடலின் பதிவை, சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் காண்பித்து, அது என்னுடைய குரல் தான் என்பதையும் உறுதி செய்து கொண்டனர்.மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட, யுனிடெக் கம்பெனி இயக்குனர் சஞ்சய் சந்திரா, டி.பி., ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, ராஜாவை பலமுறை, அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் சந்தித்தனர்.
 
மேலும் ராஜா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோதே, இவர்கள் மூவரும் தங்களின் தொழில் தொடர்பாக அவரை சந்தித்து பேசுவர்.இவ்வாறு ஆசிர்வாதம் கூறினார்.
 
இந்நிலையில், 2007 நவம்பர் 2ம் தேதியிட்ட தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கடிதம் மற்றும் அதிலுள்ள கையெழுத்து யாருடையது என, கேட்டபோது, அது யாருடைய கையெழுத்து என, தனக்கு தெரியவில்லை என்று ஆசிர்வாதம் கூறினார்.இது தவிர, தமிழகத்தில், மொத்தம் எத்தனை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கின்றன? அதன் உரிமையாளர்கள் யார் என்ற கேள்வியும் ஆசிர்வாதத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், எத்தனை தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கிறது என்று தெரியாது. ஆனால், சன் "டிவி' கலாநிதியுடையது என்றும், கலைஞர் "டிவி', கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரியும். தவிர, ராஜ் மற்றும் ஜெயா "டிவி' இருப்பதும் தெரியும் என்றார்.இதையடுத்து, சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று விசாரணை முடிவடைந்தது. இன்று மீண்டும் ஆசிர்வாதத்திடம் விசாரணை தொடரும் எனத் தெரிகிறது.
 
ராம்ஜெத்மலானி குறுக்கு விசாரணை:ஆசிர்வாதத்தை, கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, "2ஜி' வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது? அவர்களை அடையாளம் தெரியுமா? என, கேட்டார். அதற்கு ஆசிர்வாதம், "2ஜி' வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என, எனக்குத் தெரியாது. ராஜா, கனிமொழி பற்றி தான் தெரியும். "2ஜி' வழக்கில் கைதான மற்றவர்கள் பற்றி, ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன். மேலும், அவர்களை என்னால் சரியாக அடையாளம் காட்ட முடியாது. கடந்த 2008ம் ஆண்டு என்னை விடுவிக்கும்படி ராஜாவிடம் கேட்டேன். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டு, நான் ஏற்கனவே இருந்த ரயில்வே துறையில் சேர்ந்து விட்டேன் என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger