'வொய் திஸ் கொல வெறி' என்ற ஒரே பாடலின் மூலம் பிரபலத்தின் உச்சம் தொட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அமிதாப் பச்சன், ஆனந்த் மஹிந்திரா தொடங்கி சர்வதேசப் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவிக்க, இணையத்தில் காட்டுத் தீயாகப் பற்றி எரிகிறது பாடல்.
அனிருத்துக்கு வயசு 21. ஆளே ஜீன்ஸ் மாட்டிய கிடார் மாதிரிதான் இருக்கிறார். செம குறும்புப் பையன் என்பது பேசும்போது புரிகிறது. ஜஸ்ட் லைக் தட் ஜெனரேஷன்!
''ம்ம்ம்... என் அம்மாகிட்ட கேட்டா, மூணு வயசுலயே ஏதாவது பாட்டு கேட்டா பொம்மை கீ-போர்டில் நானே டியூன் போடுவேன்னு சொல்வாங்க. நாலு வயசுலயே பியானோ கத்துக்கிட்டேனாம். சென்னையில் டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் நடத்தும் இசைத் தேர்வுகளில் எல்லா கிரேடும் முடிச்சிட்டேன். பத்ம சேஷாத்ரியில் படிச்சப்போ, கர்னாடிக் மியூஸிக் கத்துக்கிட்டேன். லயோலா கல்லூரியில் பி.காம். படிச்சப்ப, ராக் பேண் டில் இருந்தேன். அதனால், 20 வயசுக்குள்ளேயே ஒரு மாதிரி எல்லாவிதமான இசையிலும் நல்ல அனுபவங்கள் கிடைச்சது. சன் டி.வி. நடத்திய 'ஊலல்லா' மியூஸிக் ஷோவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் கையால் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது வாங்கினேன். அதுதான் செம ஓப்பனிங். ஐஸ்வர்யா மேடத்தோட மாமா பையன் நான். காலேஜ் சமயமே ஐஸ்வர்யா மேடம் எடுத்த 12 குறும்படங்களுக்கும் நான்தான் மியூஸிக் பண்ணேன். அந்த நம்பிக்கையில்தான் '3' படத்துக்கு என்னை மியூஸிக் பண்ணச் சொல்லிட்டாங்க!''
''ஓ.கே. மேக்கிங் ஆஃப் 'வொய் திஸ் கொல வெறி' சொல்லுங்க?''
''அது வந்து... காதல் தோல்வியில் ஒரு பையன் புலம்புறதுதான் சிச்சுவேஷன்னு ஐஸ்வர்யா மேடம் சொன் னாங்க. 100 பசங்கள்ல 90 பசங்க இதை அனுபவிச்சு இருப்போம். ரெண்டு, மூணு நிமிஷத்துக்குள்ளேயே மனசுக்குள்ள ஒரு டியூன் ஓட ஆரம்பிச்சது... சும்மா அப்ப டியே கீ-போர்டில் வாசிச்சேன். ஐஸ்வர்யா மேடத்துக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உடனே, தனுஷ் சாருக்கு போன்ல சொல்லவும்... அவர் 10 நிமிஷத்துல ஸ்டுடியோ வந்துட்டார். டியூனைக் கேட்டுட்டு, 'வொய் திஸ் கொல வெறிடி'னு பாட ஆரம்பிச்சார். தமிழும் இங்கிலீஷ§ம் கலந்து சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருந்தது. உடனே, வரிகளை அப்படியே டெவலப் பண்ணச் சொன்னோம். 'லவ்வு லவ்வு ஓ மை லவ்வு'னு ஆரம்பிச்சு கடைசி யில 'ஃப்ளாப் ஸாங்'னு முழுப் பாட்டையும் 25 நிமிஷத்துக்குள் முடிச்சிட்டோம். ஜஸ்ட் லைக் தட் பாட ஆரம்பிச்சதால், இப்போ வரை இந்தப் பாட்டுக்குனு லிரிக்ஸ் ஷீட்னு ஒண்ணு இல்லவே இல்லை!''
''அது என்ன சூப் ஸாங்?''
''லவ்ல மொக்கை வாங்கின பசங்களுக்கு ஏதாவது பேர் வைக்கலாம்னு யோசிச்சப்ப, 'சூப் பாய்ஸ்'னு தனுஷ் சார் வெச்ச பேர் அது!''
''தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் யாராவது பாராட்டினாங்களா?''
''இல்லை... இதுவரை இல்லை!''
''உங்க ரோல் மாடல் யார்?''
''நைன்டீஸ் ஜெனரேஷன் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான் என் ரோல் மாடல். இளையராஜா சார் மியூஸிக்கும் ரொம்பப் பிடிக்கும்!''
''முதல் பாட்டே செம ஹிட். மத்த பாடல்களுக்கு இந்த எதிர்பார்ப்பே நெகட்டிவ்வா இருக்குமே...''
''அந்தப் பதற்றம் கொஞ்சம் இருக்குதான். ஆனா, 'கொல வெறி' மாதிரி இன்னொரு பாட்டு '3' படத்தில் இல்லை. அதனால், நிச்சயம் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆகும். படத்தில் அஞ்சு பாடல்களை தனுஷ் எழுதியிருக்கார். ஒரு பாட்டு ஐஸ்வர்யா எழுதி இருக்காங்க. எப்பவும் ஃபாஸ்ட் நம்பர்ஸ் மட்டுமே பாடிட்டு இருந்த ஸ்ருதி மேடம், இதில் ஒரு ஸ்லோ டியூன் பாடி இருக்காங்க. நான் ஒரு பாட்டு பாடி இருக் கேன். டூயட், கிளப் ஸாங், குத்துனு எல்லாப் பாட்டுமே வேற வேற ஸ்டைல். '3' படத்தின் மியூஸிக் தமிழ் மியூஸிக்ல இது வரைக்கும் வராதவை. அது வொர்க்-அவுட் ஆனா, பயங்கர ஹிட் ஆகும். எனக்குனு ஒரு தனி இடம் கிடைக்கும்!''
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?