தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிறிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 15.30 மணி தொடக்கம் நடைபெற்ற நிகழ்வில்,
தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு சுடரேற்றி வைக்கப்பட்டது.
இதனையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி, தீபாஞ்சலி ஆகியவையும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் தமிழீழ விடுதலைப் போராட்டகால பணிகள் பற்றிய காணொளிக் காட்சிப்படுத்துகை, கவிதாஞ்சலி, எழுச்சி நடனம், எழுச்சிப் பாடல்கள், சு.ப.தமிழச்செல்வன் பற்றிய வரலாற்றை நினைவுபடுத்தும் உரை, கருத்துரை என்பனவும் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆய்தஎழுத்துப் பத்திரிகையின் இணை ஆசிரியர் கனகரவி,
விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களின் வணக்க நிகழ்வுகளைச் செய்வது காலத்தின் தேவையாகும். ஆனால் அந்த நிகழ்வுகளைச் செய்வது மட்டும் தமிழரின் விடுதலைக்கான அரசியல் பணியாகாதென தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
தமிழரின் தாயகத்தில் இன்றும் தமிழ்மக்கள் அடக்குமுறைக்குள் தான் உள்ளனர். எனவே போராட்டத்தின் அவசியம் இன்னும் தேவையாகவுள்ளதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மக்கள் தாங்களாக உணர்ந்து என்றைக்கு ஓரணியில் திரள்கின்றார்களோ அன்று தான் விடுதலைக்கான நல்லதொரு அறிகுறி தென்படும். அடுத்த வணக்க நிகழ்விற்கிடைப்பட்ட அரசியல்ப் பணி என்ன என்பது பற்றி செயற்படுவோர் சிந்திப்பதும். அதனை மக்கள் ஆதரிப்பதும் மட்டுமே போராட்டம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதாக அமையும்.
ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் செய்யப்படவுள்ளதை அறிந்ததும் பேரூந்து வருமோ? என்ற வினாத்தொடுக்காமல் என்று மக்கள் தாங்களாக ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூடுகின்றனரோ அன்றுதான் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டத்தை உலகம் இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கும்.
புலத்து வாழ் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் தான் ஆனால் தனிப்பட்ட முன்னேற்றத்திற்குப் பாடுபட்டது போல் விடுதலைப் போராட்டத்திற்காக ஒட்டு மொத்தப் புலத்துவாழ் மக்களும் உழைக்கவில்லை. இந்தக் கசப்பான உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்காலம்... உழைத்தால் தான் தமிழர் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய நிலமையை தோற்றுவிக்கும். அடுத்தவரைக் கேள்வி கேட்பவர்கள் தாங்கள் விடுதலைக்காக எந்தவகையில் உழைத்திருக்கின்றோம் எனத் தங்களைத் தாங்களே கேட்பது தான் மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும் அவரின் உரையில் தெரிவித்தார்.
http://actressmasaala.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?