முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை, மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சென்னை போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு, சட்டவிரோதமாக 323 ஐ.எஸ்.டி.என்.
தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும், அவை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி.யின் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. கடந்த 2007-ம் ஆண்டிலேயே இதுதொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு சி.பி.ஐ. சிபாரிசு செய்தது. ஆனால் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, சமீபத்தில், இவ்விவகாரம் தொடர்பாக, பூர்வாங்க விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. கடந்த வாரம், விசாரணையை தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, தயாநிதி மாறன் வீட்டுக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தங்களிடம் அளிக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது.
இந்த தொலைபேசி இணைப்பகம், சன் டி.வி.க்கு எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பான தொழில்நுட்ப விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுள்ளது. இந்த புகார் குறித்து சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுவதாவது:-
தயாநிதி மாறன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இவை, வீடியோ கான்பரன்சிங், அதிக சக்திவாய்ந்த டிஜிட்டல் ஒளிபரப்பு போன்றவற்றுக்காக பெரிய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடியவை ஆகும். இவற்றுக்கான கட்டணமும் அதிகம். ஆனால், ஏறத்தாழ இலவசமாகவே சன் டி.வி.க்காக இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தயாநிதி மாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு பூமிக்கு அடியில் கேபிள் பதிக்கப்பட்டு, இந்த இணைப்புகள் சன் டி.வி.க்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன. பி.எஸ்.என்.எல்.லில் குறிப்பிட்ட நபரைத் தவிர, வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாதவகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், தயாநிதி மாறன் வீடு, ஒரு தொலைபேசி இணைப்பகம் போலவே செயல்பட்டது.
இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?