Thursday 6 October 2011

நாக ரத்தினம்!



சோதிடர் சொல்லி விட்டார்"சார்,தசாநாதன் சாதகமாக இல்லை.உங்கள் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் அதுதான்"

"ஏதாவது பரிகாரம் செய்யலாமா?"

"செய்யலாம்.கஷ்டம் கொஞ்சம் குறையும்.அதற்கு முன்னால்,உங்கள் குல தெய்வத்தை வழிபட்டு விடுங்கள்.அப்போதுதான் பரிகாரம் பலன் தரும்"

யோசித்தேன்"கடைசியாக ஊர்ப்பக்கம் போய் பதினைந்து வருடம் இருக்குமா?" இத்தனை ஆண்டுகளாக ஊர்ப்பக்கமே போகாமல் இருந்தது உறுத்தியது.போய் விட வேண்டியதுதான் போய்க் குல தெய்வமான அய்யனாருக்கு எல்லாப் பூசையும் செய்து விட்டு வர வேண்டியதுதான்.

அடுத்த வாரமே புறப்பட்டேன். ரயில் நிலையத்துக்கு என் நண்பன் வந்திருந்தான். அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் கிராமம்.

அவனது பைக்கிலியே சென்றோம்.அவன் மனைவி குழந்தைகள் அன்பாக வரவேற்றனர்.

அன்று கிராமத்தில் பெரிசுகளையெல்லாம் பார்த்து விட்டு வந்தேன். கோவில் பூசாரியிடமும் மறுநாள் பூசைக்கு எல்லாம் தயாரா என்று கேட்டு விட்டு வந்தேன்.

தோப்புப் பக்கம் போனேன்.எத்தனை நாட்கள் விளயாடிய இடம்? அங்குதான் தூங்கண்ணனைப் பார்த்தேன்.எல்லார் வீட்டிலும் என்ன வேலை சொன்னாலும் செய்வான்;யார் வீட்டிலாவது சாப்பிடுவான். தனியாள்.

"என்ன ,தூங்கண்ணே! எப்படியிருக்கே? "

என்னை உற்றுப் பார்த்தான்."யாரு ?கோடி வீட்டுத் தம்பியா?என்ன ஊரையே மறந்துட்டீங்களா?"

"அதான் வந்துட்டேனே.என்ன செஞ்சிட்டுருக்கே ?"

சொன்னான்"நாந்தான் இந்தத் தோப்புக்குக் காவல்.இதை பாண்டித்தேவர் வாங்கிட்டாரு. அவர்தான் ஒரு பக்கமா உக்காருடான்னு சொல்லி இங்கேயே இருக்கச் சொல்லிட்டாரு" பேசிக் கொண்டிருக்கும் போதே சிறிது தூரத்தில் ஒரு பெரிய நல்ல பாம்பு வேகமாகச் சென்று மறைந்தது.நான் பயந்து போய் அவனைப் பார்த்தேன்.

"தம்பி!நான் சொல்றதை யாரிட்டயும்சொல்லிடாதீங்க. அது ரொம்ப வயசான பாம்பு. அதுங்கிட்ட நாகரத்தினம் இருக்கு.அதை எடுக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன். அமாவாசை அன்னிக்கு ராத்திரி இரைதேடப் போகும்போது அந்த ரத்தினத்தைக் கக்கிட்டு அந்த வெளிச்சத்திலதான் போகும்.அப்ப,அந்த ரத்தினத்தைச் சாணியால மூடிட்டு அந்தப்பாம்பை லேசாக் கொன்னுடலாம்."

நான் சிரித்தேன்.

"என்ன சிரிக்கிறீங்க?நெசம் தம்பி.இது நடக்கத்தான் போகுது பாருங்க.பாண்டி த் தேவருக்கே இம்புட்டுப் பணம் எப்புடி வந்தது.ஒரு ரத்தினம் கெடச்சப்பறம்தான்"

அத்தோடு வந்து விட்டேன். மறுநாள் ,பூசை,படையல் என்று பொழுது போயிற்று. மாலை நண்பனுடன் டவுனுக்குப் போய் வந்தேன்.

மறு நாள் புறப்பட வேண்டும் .அன்று காலை யாரோ சொன்னார்கள், தூங்கண்ணன் இறந்து கிடக்கிறான்,அவனைப் பாம்பு தீண்டி விட்டது என்று.நானும் போய்ப் பார்த்தேன்.தோப்பில் அவன் கிடந்தான் .உடல் விஷத்தால் நிறம் மாறியிருந்தது.இடது கையில் வேல்கம்பு.வேலில் ரத்தம்.அருகில் அந்த நாகம் தலையில் காயத்துடன் செத்துக் கிடந்தது.

அவனுக்கு என்று யாரும் இல்லாததால், வெட்டியானையே எல்லா வற்றையும் செய்யச் சொல்லி விட்டார்கள்.ஆகும் செலவெல்லாம் பாண்டித்தேவர் பொறுப்பு.

உடலை எடுத்துச் செல்லும்போதுதான் கவனித்தேன்,அவன் வலது கை மூடியிருந்தது,இறுக்கமாக.அதைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனக்கு ஒரு நெருடல் .கையில் என்ன இருக்கும்?

நேற்று அமாவாசை!

"ஒரு வேளை,ஒரு வேளை,அப்படியிருக்குமோ?"

……………………………………………….

கதை இதோடு முடிவதே சிறப்பு.

ஆனால் சிலர் ஏதாவது ட்விஸ்ட் வேண்டும் என்பார்கள், சினிமாத்தனமாக.அவர்களுக்காக,இதோ----

……………….

இது நடந்து இரண்டு ஆண்டுகள்கழிந்த பின்,ஒரு நாள்.அந்தப் பெரிய மாலிலிருந்து வெளியேவந்தேன்.சாலைக்கு வந்ததும் என்னருகில் ஒரு கார் வந்து நின்றது.கரிலிருந்து பட்டு வேட்டி,சட்டையுடன் ஒருவர் இறங்கினார்.என்னைப் பார்த்துக் கேட்டார்"தம்பி,நல்லாருக்கீங்களா?"

பார்த்தமுகம்,ஆனால் யாரென்று தெரியவில்லை.

என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்!"

……………………………………………………



http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger