"நிதி அமைச்சகம் எழுதிய குறிப்பு விவகாரம், இதோடு முடிந்துவிட்டது. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை' என, அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் அறிவித்துள்ளனர். ஆனால், பிரச்னை இன்னும் முடிந்தபாடாக இல்லை என்கின்றனர் சீனியர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் தமிழ் சினிமாவை விட பரபரப்பாக உள்ளது. சிதம்பரத்தின் மீது நிதித்துறை அமைச்சக குறிப்பு, சுப்பிரமணியசுவாமியால் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட போது, பிரணாப் முகர்ஜியும், பிரதமரும் அமெரிக்காவில் இருந்தனர். விஷயத்தைக் கேட்டு ஷாக் ஆன பிரணாப், பிரதமரைச் சந்தித்தார். "அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என சொல்ல, பதறிப்போனார் பிரதமர். "என்ன இப்படி செய்கிறீர்கள்? சற்று அமைதியாக இருங்கள்' என, மன்மோகன் சிங் கேட்க, பதில் சொல்லாமல் வெளியேறினார் பிரணாப்.அமெரிக்காவில் இந்திய தூதுவராக இருப்பவர் நிருபமா ராவ். ராஜினாமா விஷயத்தைக் கேள்விப்பட்டதும், உடனே பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். "அவசரப்படாதீர்கள். உங்கள் ராஜினாமா விவகாரம் வெளியே தெரிய வேண்டாம்' என கேட்டுக் கொண்டார்.இதற்கிடையே பிரதமர், டில்லியில் இருந்த, டி.கே.ஏ.நாயரைத் தொடர்பு கொண்டு பிரணாப் விவகாரத்தைத் தெரிவித்தார். சோனியாவிடமும் போனில் பேசினார். இன்னொரு பக்கம், சிதம்பரத்தின் ராஜினாமா. சோனியாவைச் சந்தித்த சிதம்பரம், தன் ராஜினாமாவை கொடுத்துவிட்டதாக டில்லி முழுக்க பரபரப்பு.இந்த ராஜினாமா விவகாரங்கள் வெளியே வராமல், குறிப்பாக மீடியாவிற்கு தெரியாமல் அப்படியே அமுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் செயலர், ஒமிதா பால் என்ற பெண்மணி மிகவும் "பவர்புல்'. அவர் பிரணாப் முகர்ஜிடம் பேசி, "அவசரப்படாதீர்கள் நிதி அமைச்சக நோட்டில் சிதம்பரத்தை, நாம் குறை கூறவில்லை. பிரதமர் அலுவலகம் தான், சிதம்பரம் தொடர்பான வாக்கியத்தை நோட்டில் சேர்த்துள்ளது' என விளக்கியிருக்கிறார். "ராஜினாமா விவகாரத்தைப் பற்றி பேச வேண்டாம்; அனைத்தையும் சுமுகமாக முடித்துவிடுவோம்' என , இரு அமைச்சர்களிடமும் சோனியா பேசியுள்ளார்.இப்படி இந்த இரண்டு அமைச்சர்களுடைய ராஜினாமா விவகாரத்தை, ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தது மூன்று பெண்மணிகள் சோனியா, நிருபமா ராவ், ஒமிதா பால்.
"2ஜி' வழக்கும், பிறந்த நாள்கொண்டாட்டமும்:
சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கேரளாவைச் சார்ந்தவர். நன்றாக தமிழ் பேசுவார். ஜெயலலிதா, மாயாவதி உட்பட பல அரசியல்வாதிகளுக்கு ஆஜராகியவர். சிக்கலான வழக்கிலும் அதிரடியாக வாதாடி வெற்றி பெறுபவர். வேணுகோபால் வாதாடுகிறார் என்றாலே கோர்ட் அறை அமைதியாகிவிடும். 80 வயதிலும் நாள் முழுக்க நின்று கொண்டே சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவார் காரணம் குதிரை ஏற்றம், நீச்சலடிப்பது என பல பயிற்சிகளை இந்த வயதிலும் மேற்கொண்டு, இளைய வழக்கறிஞர்களை விட "பிட்' ஆக உள்ளார் வேணுகோபால்.இவருடைய 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட, இவருக்கு கீழே பணியாற்றிய வழக்கறிஞர்கள் திட்டமிட்டனர். வேணுகோபாலிடம் ஜூனியராக இருந்தவர்கள் பலர் இப்போது சீனியர் வழக்கறிஞராகி தனியாக பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கின்றனர். இப்படி தன் ஜூனியர் 70 பேரை சிறந்த வழக்கறிஞராக்கியிருக்கிறார் வேணுகோபால். இவர்கள் அனைவரும் சேர்ந்து, கோவாவில் வேணுகோபாலுக்கு பார்ட்டி கொடுத்தனர்.நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த பார்ட்டியில் ஒரு முக்கிய பிரமுகர் கலந்து கொள்ளவில்லை. அவரும் வேணுகோபாலிடம் ஜூனியராக இருந்தவர். காரணம் வேணுகோபால் தற்போது சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.,க்கு ஆஜராகி வாதாடி வருகிறார்.
தான் கலந்து கொண்டால், நாளைக்கு யாராவது பிரச்னை எழுப்புவர் என்பதால் அந்த பிரமுகர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவருடைய மனைவி பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்துக் கொண்டார். இவரும் வேணுகோபாலிடம் ஜூனியராக இருந்தவர்.
பா.ஜ., செயற்குழுவில் விளம்பர மயம்:
பாரதிய ஜனதா கட்சியின் செயற் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். குஜராத் முதல்வர் மோடி கலந்து கொள்ளவில்லை. பா.ஜ., ஆட்சியில் உள்ள இமாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஜார்க்கண்ட், சத்திஸ்கர் மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், கலந்து கொள்வதற்கு முன்பாக ஒரு ஆக்கப்பூர்வமான வேலையை செய்தனர். வெறுமனே கூட்டத்தில் கலந்து கொண்டால் போதுமா? தன்னை பற்றி டில்லி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? டில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில மற்றும் இந்தி தினசரிகளில் தங்கள் மாநிலத்தைப் பற்றி, முழுப்பக்க விளம்பரம் கொடுத்தனர் சில மாநில முதல்வர்கள். சம்பந்தப்பட்ட முதல்வரின் படம்தான் பக்கம் முழுக்க வெளியாகியிருந்தது. கட்சித் தலைவர் அத்வானி, வாஜ்பாய் படங்களைக் காணவே இல்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?