ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நிறுவனத்தை துவக்க இந்தியா ஒரு முக்கிய காரணியாக இருந்த சுவாரசியமான தகவல் இதோ..
மூன்று ஆப்பிள்கள் உலகையே மாற்றியுள்ளன. ஒன்று ஏவாளின் கையில் கிடைத்த ஆப்பிள். இரண்டாவது நியூட்டனின் கையில் கிடைத்தது. மற்றொன்று தான் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் ஆப்பிள் தயாரிப்புகள். இன்றைய நிலையில், சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ் புக் போன்ற இணையங்களில் பரவிக்கிடக்கும் குறுந்தகவல் இது தான்.
உலகை புரட்டிப்போட்ட ஆப்பிள் தயாரிப்பு நாயகனின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் இந்தியா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிக்கும். 73ம் ஆண்டில், தனது 18வது வயதில் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, தனது நண்பர் டான் கோட்டிக்குடன் மனநிம்மதி தேடி, இந்தியா வந்தார் ஜாப்ஸ். அப்போது தாங்கள் எங்கு தங்கி மன நிம்மதி பெறப்போகிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இந்தியா குறித்தும், அந்நாட்டின் வளமான தெய்வீகத்தன்மை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட போதனைகளுக்கும், இந்தியாவின் உண்மை நிலை (?)க்கும் உள்ள முரண்பாடுகளை கண்ட ஜாப்ஸ், மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிச்செல்வதென முடிவு செய்தார். அவர் தேடி வந்த நிர்வாணா (அ) மன நிம்மதி அவருக்கு கிடைக்க வில்லை.
ஜாப்ஸ் தனது சுயசரிதையான தி லிட்டில் கிங்டம்: தி பிரைவேட் ஸ்டோரி ஆப் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "முதன் முதலாக நான் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்து உணர ஆரம்பித்தேன். இவ்வுலகை மேம்படுத்த அவர் கார்ல் மார்க்சை விட கரோலி பாபாவை விட, எடிசன் நிறைய செய்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். கரோலி பாபா என்பவர் ஸ்டீவ் ஜாப்சின் குரு. ஆன்மீக மார்க்கத்திற்கு திரும்பவிருந்த ஜாப்சை அறிவியல் மார்க்கத்திற்கு திருப்பியது இந்தியா. ஜாப்ஸ்க்கு தேவையான மனநிம்மதி இந்தியாவில் கிடைத்திருக்குமானால், உலகம் தனது மூன்றாவது ஆப்பிளை இழந்திருக்கும். இந்தியாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியா திரும்பிய ஸ்டீவ் முதற்காரியமாக செய்தது ஆப்பிள் நிறுவனத்தை துவக்கியது தான். அந்நிறுவனத்தின் முதல் ஊழியர் ஜாப்சின் நண்பர் டான் கோட்டிக்.
எத்தனையோ ஞானிகளை உருவாக்கிய இந்த இந்திய மண் தான், இன்று ஐ-பொருட்களின் தாயகமான ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கவும் காரணமாக அமைந்துள்ளது. அதற்கு கைமாறாகத்தான் என்னவோ, ஸ்டீவ் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக உலகின் மிகவும் விலை குறைந்த லேப் டாப்பான ஆகாஷை வெளியிட்டுள்ளது இந்தியா!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?