கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், முதலவர் ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசினர்.
அப்போது, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் வருகை தர இருப்பதாக முதல்வரிடம் பிரதமர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்த கடிதத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க இருப்பதாகவும், அதற்கு தேதி மற்றும் நேரத்தை ஒதுக்கி தரும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டார்.
அந்த கடிதத்தை படித்த பின், பிரதமர் மன்மோகன் சிங் திங்கட்கிழமை மாலை சுமார் 6.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதல்வர் என்றும், இந்த பிரச்னை குறித்து அவரது வழிகாட்டுதல் தனக்கு தேவை என்றும் பிரதமர், முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சுமார் 100 பேருடன் ஆரம்பித்த போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கு கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் நாராயணசாமி வருகை...
பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து பேசும்போது, இந்த பிரச்னை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை கூடங்குளம் சென்று, அந்த பகுதி மக்களுடன் கலந்து உரையாடுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே தனது கடிதத்தில் தெரிவித்தபடி, தமிழ்நாட்டு குழுவை பிரதமர் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார்.
அதற்கு பிரதமர் பதில் கூறுகையில், தான் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் தொடர்பாக நியூயார்க் செல்ல இருப்பதாகவும், வரும் 27-ம் தேதி திரும்பி வந்தவுடன், அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, அறிவில் சிறந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னை தொடர்பாக வழிகாட்டும்படி மீண்டும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் ஒத்துழைப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : விகடன்.
http://sugamananeram.blogspot.com
http://sugamananeram.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?