இந்தியாவின் ஒத்துழைப்பின்றி தமிழீழ விடுதலைப்புலிகளுடான போரில் இலங்கை அரச படைகளினால் வெற்றியீட்டியிருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், இந்தியாவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டின் சகல அரசியல்வாதிகளும் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்களவர்களின் பூர்வீகமும் இந்தியாதான் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்கம் சில உறுதிமொழிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவற்றை நிறைவேற்றுமாறு தற்போது வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிளவடைய வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமல்ல எனவும், தமிழ் மக்களுக்கு சமவுரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றே தாம் வலியுறுத்தி வருவதாகவும அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது உதவிகளை வழங்கிய ஏனைய நாடுகளுடன் இந்தியாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை என தெரிவித்துள்ள சம்பந்தன், அரசாங்கத்துடன் எந்தவிதமான தப்பான அபிப்பிராயங்களும் இந்தியாவிற்கு ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த வலயங்கள் தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், வடக்கில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை விடவும் நிலையான தீர்வுத் திட்டமொன்றையே மக்கள் வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை தெற்கு மக்கள் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏழு மாதங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கம் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டால் மட்டுமே தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவசர நிலைமைகளின் போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்துவதில் தவறில்லை எனவும், அந்தச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் நாட்டில் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://tamil-joke-sms.blogspot.com
http://tamil-joke-sms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?