ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் rs 20 lakh sleep Marxist communist person
அகர்தாலா, அக். 19–
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர் பில்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி கட்டிட பணிகளை இவர் காண்டிராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்றார்.
இந்த பணி மூலம் தனக்கு ரூ.2½ கோடி லாபம் கிடைத்ததாக ஆச்சார்ஜி கூறினார். இந்த நிலையில் பணக்கட்டுகளுடன் சமர் ஆச்சார்ஜி இருப்பது போன்ற வீடியோ படக்காட்சிகள் அங்குள்ள டிவி சானலில் ஒளிபரப்பானது. இது திரிபுராவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ பட காட்சியில் ஒரு படுக்கையில் பணத்தை தூவி அதன் மீது சமர் ஆச்சார்ஜி படுத்து தூங்குவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி ஆச்சார்ஜி கூறுகையில், ''பணம் மீது படுத்து தூங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்து படுக்கையில் பண நோட்டுக்களை தூவினேன்'' என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ''கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பல கோடி சொத்து வைத்துள்ளனர். ஆனால் வெளியில் எளிமையானவர் போல வேஷம் போடுவார்கள். நான் அப்படி வாழ விரும்பவில்லை'' என்றும் தெரிவித்தார்.
சமரின் இந்த கருத்து திரிபுரா மாநில கம்யூனிஸ்டு தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமர்ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 3 வார்டுகளில் கழிவறை கட்டியதன் மூலம் எப்படி ரூ.2½ கோடி சம்பாதிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?