தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலில் என்ஜினீயர் தற்கொலை முயற்சி Thoothukudi engineer suicide attempt in america armed ship
தூத்துக்குடி, அக். 20-
அத்துமீறி ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க கப்பலில் இருந்த கேப்டன் ஒருவரும், என்ஜினீயர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் கப்பலில் இருந்த என்ஜினீயர் திடீரென்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கடல் பகுதியில் அமெரிக்க நாட்டை சார்ந்த 'சீமோன் கார்டு' என்ற கப்பல் அத்துமீறி நுழைந்தது. இந்த கப்பலை கடந்த 12-ந்தேதி தூத்துக்குடி கடல் படையினர் மடக்கிப்பிடித்தனர். இந்த கப்பலில் 10 மாலுமிகள், 25 சிப்பந்திகள் என மொத்தம் 35 பேர் இருந்தனர். நவீனரக துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அவர்களிடம் இருந்தன.
தூத்துக்குடியில் இருந்து அந்த கப்பலுக்கு சட்ட விரோதமாக யாரோ சிலர் டீசல் சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு துருவித்துருவி விசாரணை நடைபெற்றது.
அத்துமீறி ஆயுதங்களுடன் இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக, கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கப்பலில் பராமரிப்பு பணிக்காக, கப்பலின் கேப்டன் உக்ரைன் நாட்டை சேர்ந்த டுட்னிக் வாலன்டைன், என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி ஆகிய 2 பேரை மட்டும் கப்பலில் இருக்க அனுமதித்து இருந்தனர்.
நேற்று மதியம் 1 மணி அளவில் கியூ பிரிவு போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அமெரிக்க கப்பலுக்கு சென்றனர். கப்பல் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அங்கு இருக்கும் அறைகள் மற்றும் சாமான்கள் வைத்து இருக்கும் இடம் என அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர்.
மேலும் கேப்டன் டுட்னிக் வாலன்டைன், மாலுமி சிடோரெல்கோ வாலேரி ஆகியோரிடமும் போலீசார் தனித்தனியாக துருவித்துருவி பல கேள்விகளை கேட்டனர்.
அப்போது என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி, வேகமாக கப்பலின் மேல்பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு இருந்த கொடிக்கம்பத்தில் கயிற்றை கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதைக்கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன், பாய்ந்து சென்று சிடோரெல்கோ வாலேரி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திவிட்டார். இதற்குள் அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயரை பிடித்தனர். இதனால் கப்பலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி மற்றும் கேப்டன் டுட்னிக் வாலன்டைன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரிக்கு மருத்துவ பரிசோதனையும், முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரையும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
நேற்று இரவு 7-30 மணி அளவில் தூத்துக்குடி 2-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) அகிலாதேவியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். நீதிபதி முன்னிலையில் 2 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 31-ந்தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் போலீஸ் வாகனம் மூலம் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு, ஏற்கனவே கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 33 பேர் அடைக்கப்பட்டு இருந்த பகுதியில் இந்த 2 பேரையும் அடைத்தனர்.
இதற்கிடையே அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை செய்ததது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த படகு முகவர் மரிய அண்டன் வில்சன் (வயது 25), திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த படகு டிரைவர் செல்லம், தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த இடைத்தரகர் வெங்கடேசன் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் நேற்று பிடித்தனர்.
பின்னர் 3 பேரையும் தனித்தனியாக ரகசிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் எந்தெந்த பெட்ரோல் பங்குகளில் இருந்து டீசல் வாங்கப்பட்டது. அந்த டீசல் எந்த வழியாக? எப்படி கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்க கப்பலுக்கு சப்ளை செய்யப்பட்டது. இதற்காக எவ்வளவு பணம் கை மாறியது. எந்த வகையில் டீசல் பெறுவதற்கு தொடர்புகள் அமைந்தன. இதே போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்து இருக்கிறதா? இந்த கும்பலுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு உள்ளதா? என்று கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
3 பேர் அளிக்கும் தகவல்களில் ஏற்படும் முரண்பாடுகளை கொண்டு அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி 3 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?