பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மும்பையில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள இ.மெயில் செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதில் சந்தேகம் இல்லை. அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.
பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது. ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
ஏற்கனவே டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோதும் ரஜினி ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் பங்கேற்க தனக்கும் ஆசை உள்ளதென்றும் உடல்நலம் சரி இல்லாததால் போகவில்லை என்றும் கூறி இருந்தார்.
சமீபத்தில் அன்னா ஹசாரே சென்னை வந்து பச்சையப்பா கல்லூரியில் நடந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பங் கேற்று பேசினார். அப்போது அன்னா ஹசாரேயிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு ரஜினி பேசினார். உடல்நலம் விசாரித்ததுடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று உறுதி அளித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?