மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் திங்கட்கிழமை தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கோவன் 68 ரன்களும், பாண்டிங் 62 ரன்களும், சிடில் 41 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 61 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறியது. உமேஷ் யாதவின் வேகப்பந்து வீச்சை சாமளிக்க முடியாமல் தனது மூன்று விக்கெட்டுகளை அவரது பந்து வீச்சில் இழந்தது.
துவக்கத்தில் ஆஸி. அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நின்றாலும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த பாண்டிங்கும் ஹஸ்ஸியும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த அணியின் ரன்கள் மெதுவாக உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய பாண்டிங் முதல் இன்னிங்ஸைப் போலவே இந்த இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஹஸ்ஸி இந்த இன்னிங்ஸில் தன் பங்கிற்கு அரை சதம் அடித்து அசத்தினார்.
சிறப்பாக விளையாடிய பாண்டிங் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. ஹஸ்ஸி 79 ரன்களுடனும், பேட்டின்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 240 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஹஸ்ஸி 89 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும்.
இன்னும் இரண்டு நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே ஆட்டம் கண்டது.
சேவாக் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹில்பெனாஸ் பந்தில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத காம்பீர் இந்த முறையும் சொதப்பினார். அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த டிராவிட்-டெண்டுல்கர் ஜோடியும் நீடிக்கவில்லை. டிராவிட் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து லட்சுமணன் 1 ரன்னிலும், கோக்லி ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸிலாவது தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கரும் 34 ரன்கள் எடுத்திருந்தபோது சிடில் பந்து வீச்சில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும், அஸ்வினும் நிலைத்து நின்று பொறுமையாக விளையாடினர்.
ஆனால் அவர்களது கூட்டணியும் நிலைக்கவில்லை. கேப்டன் தோனி 23 ரன்களிலும், அஸ்வின் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெயிலெண்டர்களான ஜாகீர்கான் 13 ரன்களிலும், உமேஷ் யாதவ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 169 ரன்களில் முடிவுக்கு வந்தது.
இதனால் 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஆஸி. அணி சார்பில் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளையும், பீட்டர் சிடில் மூன்று விக்கெட்டுகளையும், ஹில்பெனாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆஸி. அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது.
இந்த 2011- ம் ஆண்டில் தான் விளையாடிய கடைசி போட்டியை இந்திய அணி தோல்வியோடு முடித்திருக்கிறது. புத்தாண்டிலாவது இந்திய அணி வெற்றியோடு தொடங்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?