சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் அமைப்பு நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பாடகருமான கிரிஷ் ஆகிய மூன்று பேரும் கலந்துகொள்வதாக இருந்தார்கள். விடுதலைப்புலிகளின் எதிர்பாளரான கருணா கோஷ்டியினர் இந்த விழாவை நடத்துவதாகவும், எனவே அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் திடீர் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் ஜீவா அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தமிழர்கள் மனம் புண்படுகிற மாதிரி எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி, சுவிட்சர்லாந்து பயணத்தை அவர் ரத்து செய்து விட்டார்.
இந்த நிலையில், நடிகை சங்கீதாவும், அவருடைய கணவர் பாடகர் கிரிசும் சென்னையில் நேற்று மாலை பேட்டி அளித்தார்கள்.
அப்போது சங்கீதா கூறியதாவது:-
நான் தமிழ்ப்பெண். இங்கேயே பிறந்து வளர்ந்தவள். தப்பான நிகழ்ச்சிக்கு போக மாட்டேன். நான், நேர்மையான பெண். பணத்துக்கு ஆசைப்பாட்டு சுவிட்சர்லாந்துக்கு போகவில்லை. கடந்த வருடம் இதே அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். நிகழ்ச்சியை நடத்தியவர்கள், எங்களிடம் மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். அவர்களுக்குள் உள்ள போட்டி காரணமாக, யாரோ சிலர் எங்களுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த மிரட்டல் பற்றி நான் போலீஸ் கமிஷனரிடம் பேசினேன். உங்கள் தொழில் தொடர்பாக செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று அவர் கூறினார். நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடமும் கூறினேன். நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை. சுவிட்சர்லாந்துக்குத்தானே செல்கிறீர்கள். அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது என்றார்.
சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அங்குள்ள கமிஷனர் கலந்து கொள்கிறார். அதனால் எங்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு கிடைக்கும். எனவே 31-ந் தேதி அன்று இரவு இங்கிருந்து நாங்கள் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட இருக்கிறோம்.
இவ்வாறு சங்கீதா கூறினார்.
சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் கூறியதாவது:-
இலங்கையில் நடந்த போருக்குப்பின், தலைவர் இல்லாததால் தமிழ் அமைப்புகள் இரண்டு மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அவர்களுக்குள் நடக்கும் சண்டையில், எங்களை பிரச்சினைக்குள்ளாக்குவது எந்தவிதத்தில் நியாயம்?
இது, எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு இடையே நடைபெறும் சண்டை போல் உள்ளது. இதனால் எங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எங்களை நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பவர், தமிழர்களுக்கு எதிரானவர் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். எனக்கு பாட மட்டுமே தெரியும். அரசியல் தெரியாது.
மேற்கண்டவாறு கிரிஷ் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?