மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் உள்ள கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் இருந்த கால்வாய் தூர்த்து வாரப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்ட முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் முதல் மேயர் வரை மக்களுக்கு துரோகம் செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கந்தன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் இருந்த கால்வாயை மூடி விட்டு 20 அடி சாலை 60 அடியாக அகலப்படுத்தப்படு பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? மூடப்பட்ட கால்வாய் அகலப்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மேயர் சைதை துரைசாமி கூறியதாவது,
கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. திமுக அரசும், அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும் மக்களுக்கு எதிராக செயல்பட்டது தெரிய வந்தது.
கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் மேயர் வரை சட்டத்தை மீறி மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். இந்த சாலைப் பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் எம்.ஜி.ஆர். அரசும், அதற்குப் பிறகு ஜெயலலிதா அரசும் அந்த கால்வாயை செப்பனிட்டு கரைகளை பலப்படுத்தின. ஆனால் திமுக ஆட்சியிலே அந்த கால்வாயின் பெரும் பகுதியை தூர்த்துவிட்டு சாலையை அகலப்படுத்தியுள்ளனர்.
தனி நபர்கள் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்துள்ளனர். அந்த சாலையில் மொத்தமே 9 வீடுகள் தான். அதற்காக தனியாக பூங்கா அமைத்து விதியை மீறியுள்ளனர். இது குறித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து மாநகராட்சி மன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.
பிறகு கேள்வி நேரத்தின்போது துணை மேயர் பெஞ்சமின், அதிமுக கவுன்சிலர்கள் தி.நகர் சத்யா, ஜெயந்தி, நூர்ஜகான், ஹேமமாலினி ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு மேயர் சைதை துரைசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் சாலை வசதிகள், மழைநீர் வடிகால்வாய்கள், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்ய பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் மட்டும் சுமார் ரூ.220 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தும் பணிகள் துவங்கும்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலை 130வது வட்டத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விருகம்பாக்கத்தில் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி, அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் இருந்து கூவம் வரை தனியாக பக்க கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் வரும் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும்.
மாநகராட்சிகளின் சில வார்டுகளில் குப்பைகளை அகற்ற நியமிக்கப்பட்ட நீல்மெட்டல் பனால்கா என்கிற தனியார் நிறுவனம் ஒழுங்காக செயல்படவில்லை. இதனால் அந்நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் 31ம் தேதி முடிகிறது.
அதற்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய நிறுவனத்திடம் இந்த நிறுவனப் பணியார்களை சேர்த்துக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்யும் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?