சசிகலா குடும்பத்தினரை களையெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா அடுத்த கட்டமாக சசிகலா ஆதரவாளர்கள் மீதும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் உள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு வேண்டப்பட்ட பலர் அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் பி.ஏக்கள், காவல்துறை அதிகாரிகள் என பல மட்டத்தில் நிறைந்துள்ளனர். இவர்களையெல்லாம் எப்படி ஜெயலலிதா களையெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இந்த வரிசையில் அடுத்து மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யரின் பெயர் அடிபடுகிறது. இவர் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். பெயர்தான் அய்யர், ஆனால் இவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இவரது பதவிக்கு இப்போது ஆபத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரை சீக்கிரமாக தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டு போய் விடுவார் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், பல்துறைச் செயலாளர் பதவிகள் உள்ளிட்டவற்றை வகித்த ஐஏஎஸ் அதிகாரிதான் அய்யர். சசிகலா பரிந்துரைப்படிதான் இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் பெயரும் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாக தெரிகிறது.
நீண்ட காலமாக ஜெயலலிதாவின் ஆஸ்தான வக்கீலாக இருந்து வந்த ஜோதியை, சசிகலா தரப்பு ஓரம் கட்டியதால் கடுப்பான ஜோதி திமுகவில் போய் ஐக்கியமாகி விட்டார். இதையடுத்து அந்த இடத்துக்கு சசி தரப்பால் கொண்டு வரப்பட்டவர்தான் நவநீதகிருஷ்ணன்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பிறந்தநாள் பரிசு வழக்கு உள்ளிட்டவற்றில் இவர்தான் ஆஜராகி வந்தார். 3வது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இவரையே அட்வகேட் ஜெனரலாக்கி விட்டார் ஜெயலலிதா - சசி பரிந்துரையின் பேரில்.
ஆனால் நவநீதகிருஷ்ணனால் ஜெயலலிதா அரசுக்கு சிக்கல்கள்தான் வந்ததே தவிர ஒரு நல்லதும் நடக்கவில்லை. அதில் முக்கியமானது சமச்சீர் கல்வி வழக்கு. தேவையில்லாமல் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர்கல்வித் திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய, அதை தடுக்காமல், உரிய சட்ட ஆலோசனை கூறாமல் உச்சநீதிமன்றம் வரை இட்டுச் சென்று ஜெயலலிதா அரசுக்குப் பெரும் களங்கத்தையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தியவர் நவநீதகிருஷ்ணன்.
மேலும் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என பலவற்றிலும் கூட நவநீதகிருஷ்ணன் பெரிய அளவில் சொதப்பினார். ஜெயலலிதா அரசை ஒவ்வொரு கோர்ட்டாக குட்டு வாங்க வைத்தார்.
இந்த நிலையில் தற்போது சசிகலாவே போய் விட்டதால் விரைவில் நவநீதகிருஷ்ணனும் தூக்கப்பட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.
இதேபோல அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான பி.ஏக்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலர் சசி ஆதரவாளர்கள் என்று தெரிகிறது. எனவே விரைவில் இவர்கள் நீக்கப்படுவார்கள் என்று பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?