முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதா, சசிகலா, அவரது அண்ணி இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த சொத்துக்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவையெல்லாம் எனது பெயரைப் பயன்படுத்தி வாங்கப்பட்டவை. இவற்றுக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. எனது வீட்டில் கைப்பற்றப்பட்ட செருப்பு உள்ளிட்ட அனைத்தும் நான் சினிமாப் படங்களில் நடித்தபோது பயன்படுத்தியவை. அதை சொத்தாக கருத முடியாது என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து சசிகலா விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே நீதிபதி கேட்கவுள்ள கேள்விகளை முன்கூட்டியே தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் அதற்குப் பதிலளிக்க வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தமிழிலேயே விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா நிராகரித்து விட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த பெஞ்ச், 6 வார கால இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்காலத் தடை குறித்து சசிகலாவின் வக்கீல் வெங்கடேஸ்வரலு தெரிவித்தார். இதையடுத்து ஜனவரி 18ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
அடுத்து என்ன நடக்கும்?
சசிகலாவை தனது நட்பு வட்டத்திலிருந்து ஜெயலலிதா தூக்கி எறிந்து விட்டார். இந்த நிலையில், பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா தரப்பு அப்ரூவர்களாக மாறுவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?