தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எல்லைக்குள்ளாகவே பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்கும், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை கேட்டு, அவற்றை களைவதற்கும் ஏதுவாக தலைவர் கலைஞர் 1996ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்களை கட்டித்தர உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் பெரும்பான்மையான தொகுதிகளில் அப்பணி நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில், சென்னையில் ஏற்கனவே இருந்த 14 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகங்கள் சென்னை மாநகராட்சி சார்பிலும்-பொதுப்பணித்துறையின் சார்பிலும் அமைத்துத்தரப்பட்டுள்ளது. தொகுதிகளின் மறு சீரமைப்பு அடிப்படையில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சென்னை 16 சட்டமன்றத் தொகுதிகளாக உயர்ந்தது.
அதில் ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகங்கள் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2011 ஜூன் மாதத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மேற்சொன்ன ஐந்து சட்டமன்றத் தொகுதி அலுவலகங்கள் கட்டுவதற்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் முதல் வட்டச் சாலை, ஜவஹர் நகர், கொளத்தூர் என்னும் இடத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு கட்டப்பட்டு, எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருந்த, பழைய கட்டிடம் ஒன்றினை சீர்ப்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தினர், தொகுதி அலுவலகமாக தற்போது எனக்கு வழங்கினார்கள்.
அன்று முதல் தொடர்ந்து, சென்னையில் நான் இருக்கும் சமயங்களில் எல்லாம், வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்து கொண்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல், இரண்டு பேரை நிரந்தரமாய் அங்கே பணியில் அமர்த்தி, முழுநேரமும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உரிய துறைகளுக்கு அனுப்பி, தீர்வு காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை சகித்துக்கொள்ள முடியாத, அ.தி.மு.க. அரசு, அந்த அலுவலகத்தை ஒதுக்கீடு செய்தது தவறு என்றும், மீண்டும் மன்றக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து முடிவெடுத்து அனுப்பும்படியும் அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அன்றைய மேயர் மா. சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.
அந்த வகையில், அன்றைய மேயர் தலைமையில் மன்றம் கூடி, அனைத்துக்கட்சித் தலைவர்கள் குறிப்பாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் மு.க. ஸ்டாலினுக்கு விதி முறைகளின்படிதான், நியாயமாக அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மிகச்சிறப்பாக சேவை ஆற்றிட பயன்படும் அந்த அலுவலகம், அங்கேயே தொடர்ந்திட வேண்டும் என உரையாற்றி, அந்த உரைகளின் குறிப்புகளெல்லாம், முறைப்படி அரசு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருசில குறுகிய கண்ணோட்டம் கொண்ட ஆளுங்கட்சியின ரின் தூண்டுதலின்பேரில், அ.தி.மு.க. அரசு அந்த அலுவலகத்தை காலி செய்ய தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் எனது தொகுதி மக்களுக்கு கடமையாற்றும் அந்த அலுவலகம் பறிக்கப்படுமேயானால், கொளத்தூர் மையப்பகுதியில் எங்கேயாவது ஒரு நடை பாதையின் நடுவே மேஜை- நாற்காலி போட்டுக் கொண்டு, என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?