இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள் மீது கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் அப்பாவி தமிழர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வருகிறார்கள்.
கேரளா மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப்பாறை, நெடுங்கண்டம், உள்பட பல இடங்களில் 10 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் ஏலத்தோட்டங்கள், காப்பித்தோட்டங்கள், மிளகு தோட்டங்களில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கேரளாவில் ஏலத்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விரட்டி அடிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் சிலர் காயம் அடைந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஏராளமான தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு இரவோடு, இரவாக தப்பி வருகிறார்கள். அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வசித்த செல்வி (வயது 48), தங்கம் (24), முனீஸ்வரி (26), ஈஸ்வரன் (33), இவருடைய மனைவி காமுத்தாய் (30), மகேஸ்வரி (27), அபர்ணா (4), சக்திகுமார் 2 மாத கைக்குழந்தை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கங்கா (7), சக்தி பங்காரு (10), சங்கீதா (7) ஆகிய 11 பேர் கேரளாவில் இருந்து தப்பி வந்து உள்ளனர்.
இவர்கள் சதுரங்கபாறை மெட்டு வழியாக தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இது பற்றி போடி தாசில்தார் நா.நாகமலை கூறும் போது,
கேரள மாநிலத்தில் இருந்து தப்பி ஓடி வந்த தமிழர்கள் 11 பேர் இங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. தங்கவும் வசதி செய்து கொடுத்து உள்ளோம். இவர்களில் காமுத்தாய் என்பவரின் கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த குழந்தைக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.
கேரளாவில் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல் பற்றி தப்பி வந்தவர்கள் கூறியதாவது: எங்களில் செல்வி, தங்கம், முனீஸ்வரி ஆகியோர் 3 தலைமுறையாக கேரளாவில் வசித்து வருகிறோம். நாங்கள் கஞ்சிகலயம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களில் கூலி வேலை செய்து வந்தோம்.
கேரள அரசு தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளு படி செய்யப்பட்டதால், ஏலத்தோட்டங்களில் தங்கி வேலை செய்துவரும் தமிழ் குடும்பத்தினர் மீது கேரளாவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எங்களை அடித்து விரட்டுகிறார்கள். எங்களை தாக்கும் போது விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். கேபிள் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.
பாரத்தோடு, மைலாடும்பாறை, ஆட்டுவாரை, ஆடுகூந்தல், நெடுங்கண்டம், பாம்பன்பாறை உள்பட அப்பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களில் மலையாளிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக நாங்கள் இரவிலேயே தோட்டப்பகுதியில் பதுங்கி இருந்தோம். காலை 7 மணிக்கு வனப்பகுதி வழியாக மாலையில் தேவாரம் வந்து போடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் கேரள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. போலீசாரும் எங்களை தாக்குகிறார்கள். மேற்கண்டவாறு கேரளாவில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உடும்பன்சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 25&க்கும் மேற்பட்ட தமிழர்கள் தேவாரம் பகுதிக்கு தப்பி வந்தனர். கேரளாவில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தேவாரம் வந்த தமிழர்கள் அப்பகுதிகளில் இருக்கும் அவரவர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். இதுகுறித்து தப்பி வந்த தமிழர்கள் கூறியதாவது:
வசந்தா (பெருமாள்குளம் எஸ்டேட்) : நான் சிறுவயதில் இருந்தே கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை செய்கிறேன். முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையினால் எங்களை நேரடியாக தாக்கும் மலையாளிகள் கும்பல் வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். 1 மணிநேரத்தில் வீட்டை காலி செய்யவேண்டும் இல்லா விட்டால் என்ன நடக்கும் என்றே கூறமுடியாது. என்று மிரட்டினார்கள்.
இரவில் கற்களை வீடுகளுக்குள் எறிந்து மனிதாபிமானமே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். ஆண்டிச்சாமி (பெருமாள் குளம் எஸ்டேட்) : உடுப்பஞ்சோலையில் தமிழர்கள் வாழும் இடங்களில் ஆட்டோக்களில் கும்பலாக வந்த மலையாளிகள் வயதானவர் என்று கூட பார்க்காமல் திட்டி அடித்தனர். உனது ஊருக்கு ஓடுடா என்று விரட்டினார்கள். பஸ்சில் ஏறினால் கேரளாக்காரர்கள் டிக்கெட் தர மறுக்கின்றனர். கம்பம் மெட்டு வழியே பஸ்கள் இல்லாததால் நான் தங்கியுள்ள எஸ்டேட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தூரம் நடந்து சதுரங்கப்பாறை வழியே வந்தேன்.
கடந்த 3 நாட்களில் மட்டும் குறைந்தது 1000 தமிழ்க்குடும்பங்கள் வெளியேறி உள்ளன. பலநாட்கள் வேலைசெய்த எஸ்டேட்களில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி வந்தேன்.
தமிழர்களையும், தமிழ்ப்பெண்களையும் மிரட்டுவது குறித்து அங்குள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தேன். போலீசார் வந்து பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நினைத்தால், அவர்கள் உங்கள் ஊருக்கு சென்றுவிடுங்கள் என்றனர். அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.விடம் கூட்டமாக சென்று கூறினோம். தமிழர்கள் தேர்தல் நேரத்தில் உங்களுக்கு தானே ஓட்டுப்போட்டோம் என்றோம். உங்களை மிரட்டத்தானே செய்கிறார்கள். அடித்தால் வந்து சொல்லுங்கள் என்றார்.
உயிருக்கு பயந்து மலைப்பாதையின் வழியே ஓடிவந்து தப்பித்தேன். அங்குள்ள தமிழர்கள் கடந்த 3 நாட்களில் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர். அங்கு இருக்கும் தமிழர்களும் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள்.
முருகேஸ்வரி (உடுப்பஞ்சோலை): எஸ்டேட்களில் வேலைசெய்து தான் எங்களது வாழ்க்கையே ஓடுகிறது. வயதானவர்கள் முதல் சிறுகுழந்தைகள் வரை விரட்டி அடிக்கப்படுகின்றனர். எஸ்டேட்களுக்குள் புகுந்து, வேலை பார்த்தது போதும் சொந்த ஊருக்கு போங்கள் என்கின்றனர். இரவில் பாதையே தெரியாமல் கற்களையும், முட்களையும் கடந்து தட்டுத்தடுமாறி மலைப்பாதையில் நடந்து வந்தோம்.
தமிழர்கள் என்றாலே இழிவாக நடத்துகின்றனர். அங்குள்ள தமிழ்க் குடும்பங்களை காப்பாற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தப்பி வந்த தமிழர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?