வாதத்திற்கு மருந்துண்டு, ஆனால் பிடிவாதத்திற்கு இல்லை என்று முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என்று தீர்மானமாக உள்ள கேரள அரசு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேனியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆந்திராவில் பாலாறு பிரச்சனை, கர்நாடகாவில் காவிரி பிரச்சனை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும்
கடந்த 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி கிடைத்தது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை. அப்போது பதவியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி கேரள அரசை எதிர்த்துக் கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த பிரச்சனைகளுக்கு மத்திய அரசுதான் காரணம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தான் தீர்வு காண வேண்டும். ஆனால், பிரதமர் இரு மாநிலங்களுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்கிறார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன் என்று தெரிந்ததும் என்னை இங்கு வரவிடாமல் தடுத்தனர். போராடி வந்துள்ளேன். கருணாநிதி எனது கல்யாண மண்டபத்தை இடித்தார். ஜெயலலிதா எனக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறார். அதை பொருட்படுத்தாமல் மக்கள் வளமாகவும், மண் செழிப்பாகவும் இருக்க போராடி வருகிறேன்.
கேரள அரசு, மக்கள் பிரச்சனைக்காக என்றுமே பொறுத்துப் போனதில்லை. நாம் அனைவரும் இந்தியர் என்று பார்க்கிறோம். ஆனால் கேரளா தான் மக்களைப் பிரித்துப் பார்க்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு அதை தீர்த்து வைத்ததா? இல்லையே. மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா?.
தமிழக மக்கள் ஏமாளிகள் என கேரள அரசு நினைத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மோசமாக உள்ளதால் கேரள மக்கள் உயிரிழப்பார்கள் என்று கேரள அரசு கூறி வருகிறது. அவர்களுக்குத்தான் மக்களின் உயிர்களுக்கு அக்கறை உள்ளதுபோலும், எங்களுக்கு அக்கறை இல்லாததுபோலும் பேசி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய படம் என்பதால் டேம் 999ஐ நான் பெங்களூருக்கு சென்று பார்த்தேன். தமிழகத்தில் வெளியிட்டாலும் அது ஓடாது. கேரளாவுக்கு காய்கறி அனுப்பாததால் காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் தேனி மக்கள் சந்தோஷமாக உள்ளனர்.
கேரள அமைச்சர் ஜோசப் தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம். ஆனால் அணையை இடித்துக் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்கிறார். எவ்வளவு தண்ணீர் தருவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பிறகு மழை வந்தால் தண்ணீர் தருகிறோம் என்பார்கள்.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அந்த அணையின் தண்ணீர் அடுத்துள்ள இடுக்கி அணைக்கு செல்லும். இடுக்கி அணை முல்லை பெரியாறு அணையைவிட 10 மடங்கு பெரியது. எனவே எந்த ஆபத்தும் ஏற்படாது. மேலும் மக்கள் வசிக்கும் ஊர்கள் அணையைவிட சில ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. எனவே அணை உடைந்தாலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது. இதை நான் சொல்லவில்லை. அணை உடைந்தால் அந்த தண்ணீரை இடுக்கி அணை ஏற்றுக் கொள்ளும் என்று கேரள அரசின் வக்கீல் தண்டபாணியே கூறியுள்ளார்.
ஆளுங்கட்சி அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூட்டாக பதவியை ராஜினாமா செய்யட்டுமே பார்க்கலாம். அடுத்த ஆண்டு என்னவெல்லாம் விலை ஏறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இந்தப் பிரச்சனையில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பிக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?