ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட விலை விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விலையை உயர்த்தி விற்றால், புகார் கூறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஆவின் பால் விலையை சமீபத்தில் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆவின் நிறுவனம் தற்போது அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், கொழுப்பு சத்து குறைந்த பால் என நீலம், பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா என 4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலை தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.
அதன்படி 3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீலநிறம்) அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.17.75-ல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டது. மற்ற பிரிவு பால்களின் விலை என்ன? பால் சார்ந்த விலைகளின் விலை என்ன என்பது குறித்து சரிவர ஆவின் நிறுவனம் வெளியிடாததால் அதிகாரிகள், பொது மக்கள், சில்லறை வியாபாரிகள் மத்தியில் நேற்று பெரும் குழப்பம் நிலவியது.
ஆவின் நிறுவனத்தின் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பல சில்லறை கடைகள், சகட்டுமேனிக்கு பால் விலையை ஏற்றி, பொது மக்களுக்கு நேற்று கடும் அதிர்ச்சியை கொடுத்தனர். பொது மக்களுக்கும் சரி வர விலை உயர்வு தெரிய வராததால், கூடுதல் பணத்தை கொடுத்து பாலை வாங்கிச்சென்றனர்.
உண்மையான விலை என்ன? என்பது குறித்து ஆவின் நிறுவன முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்) அட்டைத்தாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.17.75-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் கடைகளில் ரூ.20.50-லிருந்து ரூ.27-க்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.8.90-லிருந்து 12 ஆகவும், சில்லறை கடைகளுக்கு ரூ.10.25-லிருந்து 13.50-க்கும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.11-லிருந்து ரூ.14.50-க்கும், சில்லறை கடைகளில் ரூ.13-லிருந்து ரூ.15.50-க்கும் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு சத்து (6 சதவீதம்) நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.12-லிருந்து ரூ.16.50-க்கு வழங்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.14-லிருந்து ரூ. 17.50-க்கும் விற்க அனுமதி வழங்கப்படுகிறது.
இரு முறை சமன்படுத்திய 1.5 கொழுப்பு சத்து நிறைந்த மெஜந்தா நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.9.25-லிருந்து ரூ.11.50-க்கும், சில்லறை கடைகளில் ரூ.11-லிருந்து 12-க்கும் விற்க அனுமதிக்கப்படுகிறது. நறுமண பால் ரூ.12-லிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
இந்த பட்டியல் ஆவின் அட்டைதாரர்களுக்கும், கடைகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அட்டைதாரர்களுக்கு அதிகப்படியான விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பழைய விலையில் இருந்து, ஆரஞ்சு கலர் பாக்கெட் ஒரு லிட்டருக்கு ரூ.9 அதிகரித்து உள்ளது. பச்சை நிற பாக்கெட் ரூ.7-மும், புளு கலர் பாக்கெட் ரூ.6.25-மும், மெஜந்தா கலர் பாக்கெட் ரூ. 4.50-மும் அதிகரித்து உள்ளது.
சில்லறை கடைகளை பொறுத்தவரையில் அரசு குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்தால் பொது மக்கள் அந்த கடைகள் குறித்து ஆவின் நிர்வாகத்திடம், 044-23464500, 044-23464504 என்ற எண்ணிற்கு புகார் செய்யலாம்.
இதன் மூலம் சகட்டு மேனிக்கு விலையை தாறுமாறாக உயர்த்தி விற்கும் சில்லறை விற்பனை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பால் விலையுடன் அதனை சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. வெண்ணெய் ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நெய் 230-லிருந்து ரூ.290 ஆக உயர்ந்து உள்ளது. மைசூர்பாகு, குலோப்ஜமூன் இனிப்பு வகைகள் ரூ.125-லிருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. பால்கோவா அரை கிலோ ரூ.125-லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இது போல் ஐஸ்கிரீம், நறுமண பால் வகைகள் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?