இலங்கைக்கு கடல் வாயிலாக மின்சாரம் வழங்குவதற்காகத் தான் இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்திட்டத்தில் இந்த அளவு ஈடுபாடு காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், கடல் வாயிலாக இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கத் தான் இந்திய அரசு இந்த திட்டத்தில் இவ்வளவு முனைப்பாக உள்ளது.
9-6-2010 அன்று இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையிலேயே நான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஈழத் தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கைக்கு மின்சாரம் கொடுப்பதற்காக தமிழக மக்கள் ஏன் தங்கள் உயிர்களை பணையம் வைக்க வேண்டும்? ஈழத் தமிழர் விவகாரம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை ஆகியவற்றில் பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுவது தமிழக மக்களின் நன்மைக்காக அல்ல என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?