6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிறையிலிருந்து விடுதலையானார். திஹார் சிறையின் 3வது வாசலில் பெருமளவிலான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்புவதற்காக பின்வாசல் வழியாக வெளியேறிய கனிமொழி கார் மூலம் புறப்ட்டுச் சென்றார்.
டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன்அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவே அவர் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திஹார் சிறைக்கு வெளியே மீடியாக்கள் குழுமியிருந்தனர். அதேபோல திமுகவினரும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஜாமீன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு, 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு தாமதமாக வந்தது.
அதற்குள் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி வீட்டுக்குக் கிளம்பி விட்டார். இதனால் கனிமொழியை விடுவிப்பது நேற்று இயலாததாகி விட்டது. இதனால் நேற்று இரவும் கனிமொழி சிறையிலேயே கழித்தார்.
இன்று சிறப்பு சிபிஐ நீதிபதியிடம் உயர்நீதிமன்ற உத்தரவு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவருவதற்காக அங்கு கனிமொழி சார்பில் பிணைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை சிபிஐ நீதிமன்றம் இன்று மாலை நான்கரை மணியளவில் பிறப்பித்தது.
இந்த உத்தரவு பின்னர் திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பல்வேறு நடைமுறைகள் முடிந்து இரவு ஏழரை மணியளவில் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார்.
கனிமொழியை வரவேற்க திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரும், திமுக எம்.பிக்களும், கட்சி நிர்வாகிகளும் திஹார் சிறைக்கு வந்திருந்தனர்.
கனிமொழி வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட 3வது நுழைவாயில் முன்பு பெருமளவில் பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். இருப்பினும் அந்த வழியாக கனிமொழி வரவில்லை. மாறாக சிறையின் பின்வாசல் வழியாக அவர் வெளியேறி விட்டார்.
3ம் தேதி சென்னை வருகிறார்:
முன்னதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடைமுறைகளை முடித்து விட்டு அவர் டிசம்பர் 3ம் தேதி சென்னை வருவார் என்றும், டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்வார் என்றும் கூறப்பட்டிருந்தது.
தடபுடல் வரவேற்புக்கு திமுக தயார்
சென்னை வரும் கனிமொழிக்கு தடபுடலான வரவேற்பு அளித்து பிரமாண்டமாக அவரை வீட்டுக்கு அழைத்து வர கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
விழாக்கோலத்தில் திமுகவினர்
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது திமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கனிமொழி கவலையால்தான் கருணாநிதி பெரும் சோர்வுடன் காணப்பட்டார். அவரது வழக்கமான அதிரடியைக் கூடக் காண முடியவில்லை. இப்போது அவர் நிம்மதியாக இருப்பார். தனது வழக்கமான அரசியலில் அவர் இறங்குவார். அது பல கட்சிகளுக்கு நிம்மதியான தூக்கத்தைப் பறிப்பதாக அமையும் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?