சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று தமிழக முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் இன்று தமிழக எதிர்கட்சி தலைவர். எனவே, சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, திராவிட கட்சிகளான தி.மு.க.-அ.தி.முக. ஆகிய கட்சிகள் தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக கொள்ளை கூடாரமாக மாற்றிவிட்டனர். திராவிட கட்சிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், திராவிட கட்சிகளை உதறவிட்டு வெளியில் வந்தோம்.
திராவிட கட்சிகள் தான் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்குவதால் வறுமையை ஒழித்துவிட முடியாது. சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் எதிர்கட்சி தலைவர். எனவே சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
நாட்டின் வளர்ச்சியைத் தடுத்த திராவிட கட்சிகளை வேரறுப்பது தான் பா.ம.க.வின் முக்கிய பணியாகும். 2016 ல் தமிழகத்தில் பா.ம.க.ஆளும் கட்சியாக உயர்த்தி காட்டுவோம். தமிழகத்தை ஆளும் தகுதி பா.ம.க.விற்கு மட்டுமே உள்ளது, என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?