கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் நடிகை புவனேஸ்வரி ஆள் வைத்து மிரட்டுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார். எனவே இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன். ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். இதனையடுத்து கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் தரமறுத்துவிட்டார். மேலும் என்னை ஆள்வைத்து மிரட்டினார். இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடனை தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, குருநாதனின் மனுவுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி கே.கே.நகர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?