Thursday 13 October 2011

குடும்ப ஆட்சி ஒழிந்தது, ஓடி விட்டார் அஞ்சா நெஞ்சன்: ஜெ.

 
 
 
கருணாநிதியின் குடும்ப ஆட்சி நடைபெற்ற போது, "அஞ்சா நெஞ்சன்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒருவர் உங்களை துன்புறுத்தி வந்தார். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இப்போது, குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டது. மக்களாட்சி மலர்ந்துவிட்டது. இப்போது, நீங்கள் எல்லாம் அஞ்சா நெஞ்சர்களாக ஆகிவிட்டீர்கள். அஞ்சா நெஞ்சன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர் அஞ்சி ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
 
மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது உங்களை எல்லாம் சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள்.
 
இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி மலர்ந்தது. உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் ஒரு முறை, உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கினோம்; முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினோம்; மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு 25,000/- ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கினோம்;
 
பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருக்கும் பெண்களுக்கு 50,000/- ரூபாய் என உயர்த்தப்பட்ட உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கினோம்;
மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினோம்; பெண் அரசு ஊழியர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கினோம். இந்தத் திட்டங்களின் பயனை நீங்கள் எல்லாம் தற்போது
அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
 
இது மட்டுமல்லாமல், தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க """"சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை"" என்று ஒரு தனித் துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன். இவை மட்டுமன்றி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம்; +1, +2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம்;
ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்; இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்; மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் துவக்கி வைத்துள்ளேன்.
 
சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல்
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன்.
 
இலங்கை இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும்; இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்களை இயற்றி உள்ளோம்.
 
சட்டம் - ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை, தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக அமளிக் காடாக விளங்கிய தமிழகம் நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக மாறி இருக்கிறது.
 
உங்களின் சொத்துக்கள் எல்லாம் எப்போது தி.மு.க-வினரால் பறிக்கப்படுமோ என்று இருந்த நிலை மாறி, நீங்கள் எல்லாம் தற்போது நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
 
நில அபகரிப்புகள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் நடைபெற்றன. இதனை அறிந்த நான் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கே திரும்பத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது உங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு மாநிலம் முழுவதும் நிலம் மற்றும் சொத்து அபகரிப்பு புகார்களை காவல் துறையினர் திறம்பட கவனிக்கும் வகையில் அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்தப் பிரிவுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது வழக்குகளை பதிவு செய்து, அபகரிக்கப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை 17,431 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றுள் 28 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 755 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 625 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
அபகரிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் உரியவர்களிடம் சட்டப்படி ஒப்படைக்கப் படுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.
 
முந்தைய தி.மு.க. ஆட்சியில், மின்சார உற்பத்தியில் மின் குறை மாநிலமாக தமிழகம் விளங்கியது. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மின் உற்பத்தியைப் பெருக்கவும், மின்வெட்டைப் போக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் தற்போது, மின் வெட்டு படிப்படியாக, குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டே இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நாங்கள் எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, அனைத்துத் துறைகளும் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ஒரு சுபிட்சமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இம்மாதம் 17 மற்றும் 19 தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெரு விளக்கு வசதி ஆகிய அடிப்படைத் தேவைகளை செய்து தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில்
தி.மு.க-வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள் உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக, தங்களை முன்னேற்றிக் கொண்டனர்.
 
கருணாநிதியின் குடும்ப ஆட்சி நடைபெற்ற போது, "அஞ்சா நெஞ்சன்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒருவர் உங்களை துன்புறுத்தி வந்தார். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இப்போது, குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டது. மக்களாட்சி மலர்ந்துவிட்டது. இப்போது, நீங்கள் எல்லாம் அஞ்சா நெஞ்சர்களாக ஆகிவிட்டீர்கள். அஞ்சா நெஞ்சன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர் அஞ்சி ஓடிவிட்டார். அவர், மத்திய அமைச்சராக இருந்து கொண்டு, முதலமைச்சரின் மகன் என்று கூறிக் கொண்டு தன்னை வளப்படுத்திக் கொண்டாரே தவிர உங்களுக்கு என்ன செய்தார்?
 
மதுரை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக-வின் வசம் தான் இருந்து வந்தது. ஆனால் அவர்கள் உங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை, என்பது தான் உண்மை. திமுக கவுன்சிலர்கள் என்றாலே நீங்கள் பயந்து நடுங்கக் கூடிய நிலைமை தான் இங்கு இருந்தது. அந்த அளவிற்கு திமுக-வினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர்.
 
உங்களை மிரட்டி உங்கள் சொத்துக்களை அபகரித்து திமுக-வினர் வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில், நீங்களும் வளர்ச்சி அடையவில்லை; இந்த மதுரை மாநகராட்சியும் வளர்ச்சி அடையவில்லை.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுடனேயே இருந்து, உங்களின் குறைகளை தீர்ப்பவர்களாக; உங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக விளங்குவார்கள்; உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
 
ஒரு நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவு மறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.
 
சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுச் சாதனையை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு; அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து விடை பெறுகிறேன் என்றார் ஜெயலலிதா.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger