தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதனால் கூடங்குளம் விவகாரம் மேலும் வலுத்துள்ளது.
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் கட்டப்பட்டு அணு மின் நிலையம் உற்பத்திக்குத் தயாராகி விட்டது. டிசம்பர் மாதத்தில் முதல் யூனிட் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் ஆகியோரைத் திரட்டி திடீர் போராட்டம் தொடங்கியது. இவர்கள் அனைவரும் இணைந்து போராட்டக் குழுவை அமைத்து உதயக்குமார் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சரவையிலும் மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட கூடங்குளம் போராட்டக் குழுவினர் சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து பிரதமரையும் இக்குழு சந்தித்தது.
இந்த சந்திப்பின்போது உயர் மட்டக் குழு அமைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்தக் குழு கூடங்குளம் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவிப்பதாக டெல்லியில் கருத்து தெரிவித்த போராட்டக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் திடீரென மாறினர்.
இடிந்தகரையில் தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்ட்டைத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை கால அவகாசம் தருவதாகவு்ம், அதற்குள் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கெடு விதித்தனர்.
இருப்பினும் இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதையடுத்து இன்று போராட்டக் குழு கூடி விவாதித்தது. அதன் இறுதியில் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தீர்மான முடிவுப்படி மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
இந்த முடிவை மத்திய அரசு அமல்படுத்தும் வரை, அணு மின் நிலையப் பணிகளை முற்றாக நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காலவரையின்றி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
மறுபக்கம் போராட்டக் குழுவிலிருந்து பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் விலகியுள்ளனர். அவர்கள் போராட்டக் குழுவினரை சில மர்ம நபர்கள் இயக்குவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உண்ணாவிரதம் தொடரும் என போராட்டக் குழு அறிவித்திருப்பதால் கூடங்குளம் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?