கடலூர் ஜெயிலில் இருந்து நள்ளிரவில் ஜாமீனில் விடுதலையான கே.என்.நேரு, மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து இன்று கடைசி நாள் பிரசாரம் செய்தார்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். அவர் மீது 4 நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் வழக்குகள் போடப்பட்டன. இதில் கைதான கே.என்.நேரு கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வழக்குகளாக ஜாமீன் பெறப்பட்டது. ஆனால் திருச்சி கே.கே.நகரை சேர்ந்த நெருன் மோராய் என்பவர் தொடுத்த வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கிலும் திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் கைதான துணை மேயர் அன்பழகன், ராமஜெயம் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
நேரு ஜாமீனில் விடுதலையானதையொட்டி திருச்சி இடைத்தேர்தல் களம் கடைசி நாளில் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கடலூர் சிறையில் இருந்து இரவு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நேரு, இன்று காலை சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். பிறகு அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்தார்.
திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு இன்று கடைசி நாள் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து கே.என்.நேரு வாக்கு சேகரிக்கிறார். பிரசாரத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்கிறார்கள்.
நாளை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் பணிகள் குறித்து கட்சியினருடன் நேரு ஆலோசனை செய்கிறார். நாளை மறுநாள் தில்லை நகரில் உள்ள ஓட்டு வாக்குசாவடி மையத்தில் வாக்கு பதிவு செய்கிறார்.
அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் பணிகளில் நேரு கவனம் செலுத்த உள்ளார். நேரு, ஜாமீனில் விடுதலையாகி உள்ளதால் தி.மு.க. வினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?