சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டின் போது தேமுதிக அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு, தேமுதிக அலுவலகத்தில் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டது போன்ற குளறுபடிகளைத் தாண்டி, அ.தி.மு.க.,வுடன் உடன்பாடு கண்டு 41 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில் 29 தொகுதிகளில் தே.மு.தி.க., வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு, மூன்றாவது அணி போன்ற மிரட்டல்கள் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவால் எடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என அ.தி.மு.க., முடிவெடுத்து, வேட்பாளர்களை அறிவித்ததால், தவிர்க்க முடியாத நிலையில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட வேண்டி வந்தது. முந்தைய தோர்தல்களில் தனித்து போட்டியிட்டபோது, ""தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணிகளின் காரணமாகவே வெற்றி பெறுகின்றன. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை. அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா என்று சவால் விட்டார் விஜயகாந்த்.
அவரது சாவலை எதிர்கொள்ளும் வகையில் உள்ளாட்சி தேர்தல் களம் அமைந்தது. அனைத்து பிரதான கட்சிகளும் தனித்து களமிறங்கிய நிலையில், தே.மு.தி.க., மட்டும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. மார்க்சிஸ்ட்டுகளுடன் மாநிலம் முழுவதும் முழுமையான கூட்டணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கூட்டணி என்ற குழப்பமான உடன்பாட்டுடன் தே.மு.தி.க., போட்டியிட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக மாறி, மாநிலம் முழுவதும் சுற்றி வந்தனர். "எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மக்களே... மக்களே...' 'உங்களை கேட்டுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம், உங்களை கேட்டுதான் அதிமுகவை விட்டு பிரிந்தோம்...' என்ற வேண்டுகோளுடன் துவங்கிய இவர்களின் பிரசாரம், இறுதி கட்டத்தில் "கூட்டணி துரோகம் செய்த அ.தி.மு.க.,விற்கு பாடம் கற்பியுங்கள்' என அ.தி.மு.க., எதிர்ப்பு பிரசாரமாக நிறைவடைந்தது.
இருவரும் பிரசாரத்திற்கு செல்லுமிடத்தில் கூடிய கூட்டம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. ஆனால், கூட்டத்திற்கு ஏற்ப வெற்றி வாய்ப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றி கிடைத்ததை கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் மற்றக் கட்சிகளை விட ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்து நம்பிக்கையுடன் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தே.மு.தி.க.,வின் இந்த பின்னடைவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் என்ற பதவி, கிடைத்தும், அதை அவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. கூட்டணி மூலம், தங்களது தனித்தன்மையை தொலைத்ததோடு, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் தே.மு.தி.க., இழந்துள்ளது.
தே.மு.தி.க.,வின் தேர்தல் தோல்வி குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ""ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் தேர்தல் காலத்தில் அனல் பறக்க பிரசாரம் செய்தால் மட்டும் வெற்றிக்கனி வந்துவிடாது. பொதுமக்கள் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களிலும், தினந்தோறும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், விஜயகாந்த் அதைச் செய்யத் தவறிவிட்டார்.
சட்டசபை கூட்டத்தொடரில் அவரது பங்களிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சமச்சீர் கல்வி, புதிய சட்டமன்ற கட்டிடம், திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியது உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புடைய விஷயங்களில் தங்களது கட்சியின் கருத்தை அவர் அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை.
சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வாங்கியதைப் போல், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை வாங்க வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே தேமுதிக தலைமை இருந்தது.
அதிமுக தனித்து போட்டியிட முடிவு எடுத்தததால் தான், தேமுதிக வேறு வழியில்லாமல் வெளியேறிதே தவிர, மக்களுக்குக்காக அல்ல. இப்போது அதிமுகவை குற்றம் சாட்டும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, கடந்த 4 மாதமாக வாய் திறக்காமல் இருந்தது ஏன்?
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், பொதுமக்களோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் தே.மு.தி.க., ஈடுபடவில்லை. தேர்தல் அனுபவமில்லாத தே.மு.தி.க., நிர்வாகிகளை, இரு கழகங்களும் எளிதாக பின்னுக்குத் தள்ளி வீழ்த்தி விட்டன,'' என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?