தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.
ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க. தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தே.மு.தி.க. துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.
அதுபோல் தே.மு.தி.க. தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தே.மு.தி.க. அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?