Friday, 9 September 2011

ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல செய்தியும்..





சட்டப்பேரவை விதி எண் 110 என்றாலே தமிழக முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும் போல. அதற்கும் காரணம் இல்லாமல், அவையில் அது குறித்து விவாதம் நடத்தி சலசலப்பு வர வாய்ப்பில்லை, துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, விளம்பரம் செய்து கொள்வதை தவிர்த்து,  தானே திட்டங்களையும், அறிவிப்புக்களையும் செய்தால் மக்களிடம் சென்று சேர்ந்தது போலவும் இருக்கும்.

இப்படி நேற்று விதி எண் 110 கீழ் முதலமைச்சர் அறிவித்தது தான், மரண தண்டனையை நீக்க, மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரமில்லை என்பதும்.

ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று யாரெல்லாம் துடித்தார்களோ அவர்களையும், ஜெயலலிதா முதல்வராக வரகூடாது என்று யாரெல்லாம் தடுத்தார்களோ அவர்களையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

முன்பு சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சையின் போது கூட, இப்படிப்பட்டப் நிலையைத்தான் ஜெயலலிதா தமிழகத்தில் உருவாக்கினார். எல்லோரும் விரும்புவதற்கு எதிராக முடிவெடுப்பதில் தான் தன் திறமை இருக்கிறது என்று நினைக்கிறாரோ என்னவோ?(அம்மா என்றால் அதிரடி...)

சமச்சீர் கல்வி விஷயத்தில் மௌனம் காத்த விஜயகாந்த் கூட, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை நீக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். மற்ற அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் நிலைப்பாடும் இதே போன்று தான் இருக்கிறது.

கடந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணைக் கவ்வியதால், திருமாவளவனின் இடத்தை, தான் பிடித்து விடலாம் என்று அரசியல் வலிமை பெற தீவிரமாய் இயங்கி வரும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட, சட்டமன்றத்தில் பேச இயலாது, சட்டமன்றத்தின் வெளியே.. "அபிராமி,அபிராமி" ரேஞ்சுக்கு புலம்பிக்கொண்டிருந்தார்.

எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனையைக் குறைக்கிற அல்லது ரத்து செய்கிற அதிகாரம், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்பிரிவு 72ன் படி குடியரசுத்தலைவருக்கும், சட்டப்பிரிவு 161-ன் படி மாநில ஆளுநருக்கும் மட்டும் தான் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கூட,

மரண தண்டனையை நீக்க குடியரசுத்தலைவருக்கும், ஆளுநருக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தையாவது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்புவதற்கு என்ன தடை இருக்கிறது. வெளிநாட்டு ராஜபக்ஷேவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் சட்டமன்றத்திற்கு உள்நாட்டு பிரச்சனையை பற்றி தீர்மானம் போட எதுக்கு தனியே ஒரு அதிகாரம்? குறைந்த பட்சம் விவாதமாவது செய்யலாமே?

இது அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத் தெரியவில்லை, தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரச்சனையாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில், பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் ஒரு பிரச்சனையில், இதுவரையில்  விவாததிற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உச்சகட்ட சோகம்.(அம்மா என்றால் அன்பு என்று சொந்தக்குரலில் பாடிய அம்மாவிடம் தான், கருணையை எதிர்பார்க்கிறோம்)  

இதே சட்டப்பேரவை விதி எண் 110-படி ஜெயலலிதா தெரிவித்த அறிவிப்புக்கள் அனைவரின் நெஞ்சிலும் பால் வார்த்தது என்பதை மறுப்பதற்கு இல்லை.பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அத்தனை அறிவிப்புக்களும் சிறப்பு வாய்ந்தவை.

முக்கியமாக தமிழகத்தில் இனி மாணவர்களுக்கு முப்பருவத்தேர்வு முறை  Trimester pattern இருக்கும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மாணவர்களின் சுமையை வெகுவாக குறைக்கும் என்று நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஒரு வருடம் முழுவதும் படிக்கும் பாடத்தை, மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்து தேர்வுகள் நடத்தப்போகிறார்கள். மாணவர்கள் படித்து நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய பாடப்பகுதிகளும், புத்தகங்களின் சுமையும் மூன்றில் ஒரு பகுதியாக குறைய போவதால், அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இனி "மந்திரிச்சு விட்டது போல திரிய வேண்டிய அவசியம்" இருக்காது.

ஆனால் ஆண்டு முழுவதும் "பிஸியாக" இருக்கும் தேர்வுத்துறை இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது தான் இதன் வெற்றி இருக்கிறது.


http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger