Tuesday 23 August 2011

சுய விளம்பரத்து��்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை ம���ற்றிய கருணாநிதி



தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சட்டம் சுயவிளம்பரத்துக்காக இயற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்டம், 2008ம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம், ஒரு சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டதே தவிர, இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.

ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால் அந்தச் சட்டம் மக்களுக்கு பயன்பட வேண்டும், அல்லது இது போன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

இவை எதுவுமே இல்லாமல், யாருக்கும் பயனளிக்காத ஒரு சட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மேலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதையடுத்து உடனடியாக சென்னையில் கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

கருணாநிதியின் துதிபாடிகள் அனைவரும் அவரைப் போற்றினர். இதை தவிர, வேறு யாருக்கும் எந்தவித நன்மையும் இந்தச் சட்டத்தினால் ஏற்படவில்லை. தமிழக மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, தமிழுக்கு மிகப் பெரிய சிறப்பினை செய்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக, இது போன்ற சட்டத்தினை கருணாநிதி கொண்டு வந்தார்.

தமிழர் காலக் கணிப்பு முறையின்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை தான் முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்.

ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பல்லாண்டு காலமாக, சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடு தான் பூர்விகத் தமிழ் மரபாக இருக்க முடியும். கோடைக் காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.

சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா! என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டுக்கு உரிய, பொருத்தமான நாள் ஆகும் என மதுரை ஆதினம் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரைத் திங்கள் முதல் நாளை ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டாடலாம் என பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை மாதம் தான்.

சங்க இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கியமான, பத்துப்பாட்டு இலக்கியத்தின் நெடுநல்வாடையில், சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரனார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1912ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை அவர்களும், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில் என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், திமுக ஆட்சியில் மேற்படிச் சட்டம் இயற்றப்படும் போது, அதற்கான நோக்கக் காரண விளக்க உரையில், தை திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, இந்தச் சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.

http://masaalastills.blogspot.com




  • http://masaalastills.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger