கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: உதயகுமார் kudankulam nuclear power plant shut down permanently udayakumar
ராதாபுரம், அக். 24–
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று முன் தினம் மின் உற்பத்தி தொடங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இடிந்தகரையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் தமிழ்தேச பொது உடமை கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், ம.தி.மு.க. உள்பட 30 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கூடங்குளம் 1 மற்றும் 2–ம் அணுஉலைகளை பற்றி மத்திய அரசும், அதன் அணுசக்தி துறையும், இதர அரசு அமைப்புகளும் தமிழ் மக்கள் உயிருக்கு கடுகளவும் மதிப்பு கொடுக்காமல் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக, உண்மைக்கு புறம்பாக தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இப்போது மின்சார உற்பத்தி தொடங்கி விட்டது என்று நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி விட்டது என்று கூடங்குளம் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மின் இணைப்பு அதிகாரிகள் இரண்டாம் நிலை அமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று தங்களது இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மின்சாரம் வந்ததாகவும் குறிப்பிடவில்லை.
கூடங்குளம் முதல் மற்றும் 2–வது அணு உலைகள் குறித்த உண்மை தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தரமற்ற பொருள்களால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் கூடங்குளம் உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
முதல் இரு உலைகளே முடங்கி கிடக்கும் நிலையில் 3–வது, 4–வது உலைகளுக்கு ஒப்பந்தம் போடுவது என்பது மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இந்திய இழப்பீடு சட்டத்தை அவமதித்து ரஷிய அரசுக்கு உதவும் வகையிலான நடவடிக்கையில் இறங்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் தமிழ் மக்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?