கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் சமீபத்தில் விலகிவிட்டன. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிவிட்டது. 3–வது அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தேசிய கட்சிகள், தங்கள் கூட்டணியில் செல்வாக்கு உள்ள மாநில கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக தேசிய கட்சி தலைவர்கள் மாநில கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார். எனவே, தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி சேர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தே.மு.தி.க. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ளது. அதற்கு 10 சதவீத ஓட்டுக்கள் உள்ளன. எனவே இந்த கட்சியையும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்க ராகுல் காந்தி விரும்புகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதாக தி.மு.க.வுக்கு காங்கிரஸ் உறுதி மொழி அளிக்கும் என்று கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி பாராட்டி உள்ளார். எனவே தி.மு.க.வை மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் நம்பிக்கையுடன் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் கடந்த மாதம் 25–ந்தேதி கொண்டாடப்பட்டது. அவருக்கு ராகுல் காந்தி போனில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணி யில் சேர்க்கும் முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணிக்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், கனிமொழி எம்.பி.யும் டெல்லியில் உள்ள முன்னாள் எம்.பி.க்கள் விடுதியில் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது காங்கிரஸ்–தி.மு.க. மீண்டும் கூட்டணி சேர்வது குறித்து பேசியதாகவும் இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.
மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தி–கனிமொழி சந்திப்பு நடந்தது. இதில் அரசியல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கனிமொழியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?