ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கப்படும் என்று தலைவர் விஜயகாந்த் அறிவித்த பின்னர் தான் அன்னா ஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டு வர முயன்று வருகிறார்கள் என்று விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில்,
தேமுதிக சார்பில் மக்களுக்கு ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கப்படும் என்று தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். அவர் அறிவிப்புக்கு பின்புதான் டெல்லியில் அன்னா ஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டு வர முயன்று வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் நல்ல சாலை அமைக்க, நல்ல குடிநீர் வழங்க, ஏழைகளுக்கு பட்டா வழங்க, ஊட்டி மணி கூண்டு அருகே மேம்பாலம் அமைக்க தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.
ரமணா ஸ்டைல் தான் சரி-விஜய்காந்த்:
இந் நிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் சித்ரா விஜயகுமார் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பல இடங்களில் அவர் பேசுகையில்,
நான் நடித்த ரமணா படத்தில் ஊழல் அதிகாரிகள் தூக்கி செல்லப்படுவார்கள். அதை பார்த்து மற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு யோசித்து லஞ்சம் வாங்க மறுப்பார்கள். அதேபோல்தான் ஊழலின் ஆணிவேர் எங்கு இருப்பதை கண்டுபிடித்து அதை நீங்கள் போடும் ஓட்டு மூலம் பிடுங்கி எறிய வேண்டும்.
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுமே பொற்கால ஆட்சி, பொற்கால ஆட்சி என கூறிக்கொண்டு நாட்டை கொள்ளை அடித்து வருகின்றனர். இவர்களுக்கு நீங்கள் மாறி, மாறி ஓட்டு போட்டது போதும் இனியும் ஏமாறாதீர்கள். நல்லவர்களை தேர்தலில் தேர்ந்தெடுங்கள்.
5 ஆண்டுகள் கழித்து நாங்கள் சரியில்லை என்றால் கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்டால் தான் நியாயம் பிறக்கும். ஊழல் செய்தால் விஜயகாந்துக்கு பிடிக்காது. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டான் இந்த விஜயகாந்த்.
நாங்களும், கம்யூனிஸ்டுகளும் லஞ்சம் வாங்க மாட்டோம். ஆட்சிகள் மக்களுக்காக தான் இருக்க வேண்டும். சுயநலத்துக்காக இருக்க கூடாது. மீண்டும், மீண்டும் உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து பாருங்கள் என்றார்.
முன்னதாக மதுராந்தகத்தில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த விஜய்காந்த், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் தான் பொற்கால ஆட்சியாகும். அவர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருக்குப்பின் வந்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி, மாறி ஆட்சிக்கு வந்து ஊழல் ஆட்சி தான் செய்தனர். நான் காசு மேலே துளி கூட ஆசைப்பட மாட்டேன். நல்லது செய்வது தான் எனது கொள்கை என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?