தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா.
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர்.
அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாட்டையும் பாடினார்.
பார்வையற்றவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி பாடினர். பின்னர் எல்லோரும் ஒருமித்தக் குரலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் தன் கையாலேயே உணவு பரிமாறினார் சினேகா.
தனது பிறந்த நாள் குறித்து தட்ஸ்தமிழுக்கு அவர் கூறுகையில், "ஒவ்வொரு பிறந்த நாளிலும் நான் வேண்டுவது ஒன்றுதான். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அன்பும் அமைதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும், நேர்மையோடு வாழ வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாகவே என் பிறந்த நாள் பிறருக்கும் உபயோகமாக இருக்கும்படி கொண்டாடி வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுடன் இந்த நாளைக் கொண்டாடுவது மனசுக்கு நிறைவாக உள்ளது. அவர்கள் சந்தோஷத்தில் தனி திருப்தி கிடைக்கிறது," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?